பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

சோலை சுந்தரபெருமாள்


“ஊர் ஜனங்களுக்கு என்னப் பத்தி இருக்குற அக்கற இவனுக்கு இல்லியே. எவ்வளவு பாடுபட்டு வளத்தேன். என்னா கேள்வி கேட்டுட்டான், நெஞ்சில் கொள்ளிய சொருவுன மாதிரி. எம்மவன் மட்டும் உசுரோட இருந்திருந்தா இந்தப் பய இப்புடிப் பேசியிருப்பானா. எம் புள்ளைங்க வளந்துட்டானுங்க. செலவு அதிகமாவுது. நீ, ஒம்பாட்டுக்கு அம்பது, அறுவதுன்னு செலவு செய்யறத உட்டுப்புடு, இல்லாட்டி இனிம பணத்த அவ பேருக்கே எம்.ஓ. பண்ணிடுவேன். அந்தக் குட்டியும் புருஷன் பேச்சுக் கேட்டுக்கிட்டிருந்தாளே ஒழிய, ஒரு வார்த்த, வயசான காலத்துல வேற என்னா செலவு செய்யுது, தாத்தா. பீடி உண்டா, வெத்தல பொகையில உண்டா, டீ தானே. குடிச்சிட்டுப் போறார்னு சொல்லியிருக்க வேணாம்.’

நேரம் போனதே தெரியவில்லை. சூரியன் தலைக்கு மேல் வந்துவிட்டது. ஆனாலும் உறைக்கவில்லை. பள்ளிக்கூடம் விட்டுக் குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

காலையிலிருந்து வெறும் வயிற்றுடன் இருந்தபோதும் தேவருக்குப் பசியில்லை. போகிறவர்களையும், வருகிறவர்களையும் கூப்பிட்டு இரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தால் பொழுது போனதும் தெரியவில்லை. வாய் மட்டும் இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார். மற்ற உயிரினத்திலிருந்து மனிதனைப் பிரிப்பதே வாய் வார்த்தை மட்டும்தான் என்பது தேவரின் கருத்து. வயதானக் காலத்தில் வாய் வார்த்தை ஒன்றுதான் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்பது அவரது அபிப்பிராயம்.

“தாத்தாவ்”

தொள தொளப்பான அரைக் கால் சட்டையும், திட்டுத்திட்டாக அழுக்குப் படிந்த மேல்சட்டையும் அணிந்த பேரனின் மகன் ஓடி வந்தான். “தாத்தாவ். அம்மா ஒன்னக் கூட்டியாரச் சொல்லுச்சு” மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க, படபடப்புடன் கத்தினான்.

“யேய் நீயாவே ஸ்கூல்ல இருந்து வந்துட்டியா”

“ஒன்னப் பாத்து நின்னுக்கிட்டிருந்தேன். காணும். நானா தம்பிய அழச்சிக்கிட்டு வந்துட்டேன்”

“அட பயலே”

அலுப்பு முறித்துக் கொண்டு தேவர் எழுந்தார். பின் பக்கமாக முதுகை வளைத்து நிமிர்ந்தார். எண்பது வயதுக்கு மேலாகியும் கூனல் விழாத முதுகு. மெலிந்த உடல். கூரிய பார்வை. எள் விழுந்தாலும் காது கேட்கும். சளி தொந்தரவைத் தவிர மற்றபடி பூரண ஆரோக்கியம்.