பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜீவரசம்


முன்னொரு காலத்தில் நான் பதினெட்டு வயதுள்ள இளைஞனாய் இருந்தேன். கலாசாலையில் எம்.ஏ., வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். போதாதற்கு பரீட்சை சமீபத்திருந்தது. நானே பரிட்சையில் முதல் தரமாக தேற வேண்டுமென்பதில் பெரியப் பிரமே கொண்டவன். இவ்வளவும் தவறான விஷயம் என்பது பிற்காலத்தில் தான் எனக்கு விளங்கிற்று.

பரீட்சைக்கு முன்னால் மாணாக்கர்கள் அமைதியாக படிப்பதற்கென்று ஒரு வாரம் விடுமுறைவிட்டார்கள். நகரில் இருந்தால் இந்த ஒரு வாரமும் நிச்சயமாய் வீணாகி விடுமென்று நான் அனுபவத்தில் கண்டறிந்தவன். காப்பி ஹோட்டல்கள், சினிமாக்கள், நாடகங்கள், சிட்டுக்கச்சேரிகள் முதலியவை குறித்துப் பரீட்சை வினாக்கள் கேட்பதாயிருந்தால் நகரிலிருக்கலாம். அதனால் அந்தக் குருட்டுப் பரீட்சைகளோ டார்வினைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும் அல்லவா கேள்வி கேட்கிறார்கள்? ஆகவே என்ன செய்யலாமென்று யோசித்தேன். ஓர் அற்புதமான யோசனை தோன்றிற்று.

நகரத்துக்கருகிலுள்ள ஏதேனுமொரு கிராமத்துக்குச் சென்று அந்த ஒரு வாரமும் அமைதியாகப் படித்துப் பரீட்சைப் பாடங்களைக் கரைத்துக் குடித்துவிட்டு வந்து விடுவதென்று தீர்மானித்தேன். அவ்வாறே ஒரு நாள் காலையில் ஸ்நானஞ் செய்து உடையணிந்து கைப்பெட்டி ஒன்றில் டார்வின், ஷேக்ஸ்பியர் முதலியவர்களையும், மாற்றி அணிவதற்குச் சில துணிகளையும் எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பினேன். ரயில்வே ஸ்டேஷன் சென்றதும் எந்த ஊருக்கு டிக்கெட் வாங்கலாமென்று பார்த்தேன். நகருக்கு ஐந்தாறு ஸ்டேஷனுக்கப்பால் தாமரைவேலி என்ற ஸ்டேஷன் இருந்தது. ஊரின் பெயர் அழகாய் இருந்தபடியால் அந்த ஸ்டேஷனுக்கே டிக்கெட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறினேன்.