பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

271


வர்ணங்கள் தீட்டி மறைத்தாள். விரல்கள் நகங்களோடு சுருங்கத் தொடங்கின. அக்ரஹாரத்திலும், வெளியிலும் பரவத் தொடங்கியது. கையிலும், கால்களிலும் மட்டுமில்லாமல் நெற்றியிலும், தலைமுடிக்குள்ளும் வெள்ளையாக சிவந்த நிறத்தில் குஷ்டம் பரவியபோது, எல்லோரும் அருவருப்பில் முகம் சுளித்தார்கள். ஊரும், உலகமும் அவளைத் தள்ளி வைக்கத் தொடங்கியது. மாமியாரும், மருமக்களும், நாத்தனாரும் மதனிகளும் வேறு வேறு வீடுகளைத் தேடி ஒதுங்கி ஓடிப்போனார்கள். அப்பாவும், அம்மாவும் அருவருத்து எட்டி நின்றார்கள். ராகவன் கிட்டே வராதது மட்டுமல்ல எட்டிக்கூட நிற்க மறுத்தான். சாப்பாட்டுக்கு அலுமினிய தட்டாயிற்று. குடிக்க இரும்புக் குவளை வந்தது. படுக்க பிரப்பம்பாயுமாயிற்று. கொல்லைக்கு வெளியே குடிசையுமாயிற்று. இதெல்லாம் கூட ராணி ஏற்பாடு தான். யாரும் அவளைத் தூர போகச் சொல்லவில்லை. அவர்கள் தான் தூரப் போனார்கள். ராணி அவர்களை விரட்டிக்கொண்டுதான் இருந்தாள். மைத்ரேயி மட்டும் “எப்போம்மா ஒனக்கு சரியாவும்” என்று எப்போதாவது கேட்கும். அவளுக்கு இருந்தது கித்தான் துணி மட்டும் தான் மீதமாக கொல்லைப்புறம் கிடந்த சாக்குகள் கித்தான்களா மாறின. கித்தான்களில் வெள்ளை, கருப்பு, நீல வர்ணங்களில் விபரீதமான காளியின் உருவங்களை லோச்சனத்திற்கு யாரும் வரையச்சொல்லித் தரவில்லை. டாக்டர்கள் ‘குஷ்டரோகம்’ தொற்று நோய் அல்ல என்றார்கள். கர்ம வியாதி இல்லை என்றார்கள். ஊசிகள் போட்டார்கள். தொடர்ந்து ராஜ வைத்தியம் ஆனாலும் லோச்சனம் தன் கை, கால்களில் வரைந்து கொண்டு, இலைகளும், பூக்களும், கனிகளுமாய் திரிவதை நிறுத்தவே இல்லை. அவள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்குள் போய் வந்து கொண்டிருந்தாள். தொடர்ந்து ராகவனோ, வேறு யாருமோ, துணையில்லாமல் அவள் மட்டும் தனியே போய் வர ஆரம்பித்தாள். இனம் காண முடியாத சுமையைத் தாங்கி அவள் கித்தான்களில் அவன் கற்பனைகளின் கசங்கலையும் ஒன்றாக இறக்கி வைத்தாள். உடலின் வண்ணங்கள், மினுமினுப்புகள், வீக்கங்கள், யாவும் படிப்படியாய் வடியத் தொடங்கின. அந்த ஆஸ்பத்திரியின் ‘மதர்ஸ் சுப்பீரியர்’ கேட்டார் “இன்னும் ஏம்மா ஒடம்பெல்லாம் வர்ணத்தைப் பூசிக்கிறெ? Don't hide yourself behind the colours its only an illusion ஒனக்கு நீ செய்றது புரியல்லியா?” “புரியலம்மா...” என்றாள் லோச்சனா. அவளது ஓவியங்கள் இரண்டை பார்த்த அந்த அம்மாள் அசந்து போனார்கள். “oh! Now l understand you Don't hide yourself, Don't hide yourself, behind yourself, come out and enjoy உனக்கு நேர்ந்திருக்கிறது அநீதி