பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

சோலை சுந்தரபெருமாள்


அமுதத்திலிருந்த விஷத்தை சாப்பிட்டது போல் லோச்சனம் சாப்பிட்டிருந்தாள். ‘லோச்சனா? இந்தா ஒரு ரோஜாப் பூ! கண்ணு? இந்தா ஒனக்கொரு ஜிலேபி! மகளே இந்தா ஒனக்கொரு வர்ணப்பெட்டி! டியர் மயர்! இதோ உனக்கொரு “கிஸ்” லோச்சனா ஒனக்கு குணமாயிடுத்தாடா, அவள் கால்களில் சொட்டும் இருதுளி கண்ணீர் இந்தப் பரிசுகளை யாராவது அவளுக்கு கொடுத்ததுண்டா? இது பரிசுகள் என்று அவர்களுக்காவுது, யாருக்காவுது தெரியுமா? அவர்களெல்லாம் தியாகிகள், ஞாயவான்கள் இந் உலகத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்.

மழைப் பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே கள்ளியும், முள்ளும் படர்ந்து கிடந்த அந்த தோட்டத்தில் மண்வெட்டியுடன் சேற்றில் நின்று ஒவ்வொரு செடியாக சுற்றிலும் மண் அணைத்துக் கொண்டிருந்தாள். மழையில் கள்ளிச் செடிகள் அசையாது நின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ராகவனைக் காணவில்லை. அது என்னவோ. ராணியானாலும் ராஜாவைத் தான் மனது தேடுகிறது. ராகவன் இல்லாவிட்டால் என்ன? இந்த எட்டு வருடங்களும் நோயில் படுத்து, போராடி அலையுண்ட காலமெல்லாம் எல்லாரும் தூரத்திலிருந்தே கருணையை பொழிந்தார்கள். பெற்றத் தாயிலிருந்து ஜாக்ரதையாக விலகிக் கொண்ட அசிங்கம். அவர்களுக்குப் புரியுமா? தினமும் அவளுடன் கஞ்சி குடிக்கும் கீதாரிகள் மறுபடி வரமாட்டார்கள். ஆற்றோரமாக வலயன் பிடிக்கப் போகும் குறவர்கள். வலை வீசி விறால் பிடிக்கும் வலையர்கள் யாரும் அவளைக் கண்டு விலகியதும் இல்லை. நெருங்கியதும் இல்லை!! தொழுநோயை வர்ணங்களால் பூசி மறைத்த போதும் அவர்கள் அவளுடன் அட்டகாசமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவள் ஊற்றும் கஞ்சியில் அவர்கள் யாரும் தொழுநோயின் அருவருப்பைக் காட்டவில்லை. எப்போதும் திறந்து கிடந்த அவளது வீட்டில் அவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் இஷ்டம் போல் பிரவேசித்து, எந்த நேரத்திலும், ஏதாவது தின்னக் கேட்டார்கள் அவள் குடிக்கக் கொடுத்தாள். ஒரு நாள் ஒரு கிதாரி கேட்டான்.

“ஒன் ஒடம்பெல்லாம் இருக்கே? இது குஷ்ட்டம் தானே?” அவள் சொன்னாள் “ஆமா!” - அவன் முகம் வேறுபடவில்லை!

“ஆமா... ரொம்ப வலிக்குமோ?...”

“ஏன் கேக்குறே?”

“இல்ல என்னோட பொண்டாட்டிக்கு கூட கை விரலெல்லாம் தேஞ்சு சுண்டிப் போச்சு. ஒனக்கும் அப்படி ஆயிடுமா?”

“இப்போ ஓம் பொண்சாதி எங்கேயிருக்கா?!”

“எனக்குத் தெரியாது”