பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

சோலை சுந்தரபெருமாள்


ஒரு இடி மின்னல். ஆற்றின் எதிர்கரையில் நின்ற ஒரு தென்னை மரத்தின் மீது அந்த இடி இறங்கியிருக்க வேண்டும்.

அந்தக் கொட்டும் மழையிலும் அந்த தென்னை மரம் இடி இறங்கியதால் தீப்பற்றி சடசடவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. பிசாசு போல் சடை விரித்து, நெருப்புக் கங்குகள் சிதறி தென்னை மரத்தின் இளநீர் காய்கள் நாலுயுறமும் வேட்டுகள் போட்டுச் சிதறின. “டம்! டம்! டம்! டம்!”

இனி லோச்சனம் தனி மனுஷி இல்லை. அவள் மனதிலிருந்து அந்த தென்னைமரம் திகுதிகுவென பற்றி எரிந்து அடங்கியது. இனி அங்கு புயலோ, மழையோ, சூறாவளியோ எதுவுமில்லை. காற்று அடங்கிவிட்டது. வழி திறந்துவிட்டது.

கட்டிய ஈரச் சேலையுடன் கையில் எதையும் எடுக்காமல் தான் கட்டிய அந்த வீட்டின் வாசலில் இருந்து இறங்கினாள் லோச்சனம். ஆற்றங்கரையை நோக்கி திடமாய் முடிவுக்கு வந்தவளாய் வேகமாய் நடந்தாள் ஆற்றுத் துறையில் பரிசல்காரர்களைக் காணோம். ஆற்றில் வேகமாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெரு வெள்ளத்தில் சற்றும் அஞ்சாமல் ‘தொபீர்’ என்று குதித்து எதிர்கரையை நோக்கி நீந்தலானாள். சுழல்நீர் யானைகள் வாய் பிளந்து அவள் இருபுறமும் சுழன்றன. சுழல்களை கால்களால் உதைத்து இரு கைகளையும் வீசி நீந்தினாள் லோச்சனா! ஆற்றின் மேற்பரப்பு மழை முத்துக்களை வாரி இறைத்தன. சற்றும் குறையாத மழையில் ஏறத்தாழ முக்கால் மணி நேரத்துக்கு பின்னர் வெகுதூரம் எதிர்கரையில் அஞ்சினிக்கு மேற்கே கரையேறினாள் லோச்சனா.

இனி அவள் தன்னந்தனியவள் அல்ல. இந்த உலகில் வாழப் போராடிக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான பிந்துக்களில் அவளும் ஒருத்தி, அண்டம் குலுங்கினாலும், அவள் குலுங்காமல் தொடர்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தபடி, அவள் தன்னந்தனியளாய் இந்த உலகமாகிவிடுவாள். மழை தன் வலிமையெல்லாம் சேர்த்து அவளை அடித்து துரத்தியது. அவள் - லோச்சனா எல்லாவற்றையும் விட்டு விட்டு எல்லாமாகிப் போனாள்.