பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோலை சுந்தரபெருமாள்

“கு.ப.ரா. பிச்சமூர்த்தி, எம். வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், மெளனி, க.நா.சு ஆகியோரைப் போல இவரும் தஞ்சை மாவட்டத்துக்காரர்தாம். (திருவாரூர், அம்மையப்பன், காவனூர்க்காரர்) எனினும் மேற்கண்ட ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிலிருந்து இவர் மாறுபடுகிறார். கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதிலும், தமிழ்நடையிலும் இவர் வித்தியாசப்படுகிறார். முக்கியமானது இவரது தமிழ்நடை. பாத்திரங்களின் உரையாடலில் மட்டுமின்றி படைப்பாளியின் நடையிலும் பேச்சுத்தமிழ்! இத்தகைய போக்கை ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களிடம் காண முடியவில்லை...” ‘ஓராண்காணி சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் தி.க.சி.’

1953 இல் பிறந்து சோலை சுந்தரபெருமாள் இன்றுவரை பிறந்த கிராமத்திலேயே வாழ்க்கை...

‘தரமான சிறுகதை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கிராமத்து விவசாயிகளைப் போலவே ரொம்பவும் எளிமையானவர். தனக்கென்று தனியான இலக்கியக் கொள்கை நிலை உடையவர், உறுதியானவர், நல்ல இலக்கியவாதி... மொழி, சோலை சுந்தரபெருமாளுக்கு ஒரு பெருஞ்செல்வம். கீழத்தஞ்சை வட்டார வழக்கு மொழி, கதைக்கு ஆழத்தையும், அகலத்தையும் தருகின்றன. (மாலைக்கதிர் - சிறுகதை விமர்சனத்தில் எழுத்தாளர் பொன்னீலன்)

“வாழ்வின் உயரங்களை எட்ட வேறு வழி இல்லாது உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும் எளிய மக்களின் கதை இது. இயல்புணர்ச்சியும் மிகையற்ற எளிய நடையுமே இவரின் பலம்... என உறங்க மறந்த கும்பகர்ணன் நாவலை கவிஞர் பாலா இப்படி மதிப்பிடுவதை ஏற்றுக்கொள்ளலாம்...” எண்பதுகளில் சிறந்த தமிழ் நாவல்கள் தி.க.சி. (சுபமங்களா)

“சோலை சுந்தரபெருமாளின் படைப்புகளில் யாருடைய பாதிப்பும் இல்லை. இவர் எதையும் படித்துவிட்டு அதைப் போல எழுத முயலவில்லை. எல்லாமே அவரது அனுபவ எல்லைக்குட்பட்ட ஆழ்ந்த உணர்வின் சுய வெளிப்பாடுகள். இத் ‘தனித்தன்மையே’ இவரது எழுத்துக்குப் பெருமை தரப் போதுமானது. (‘மண் உருவங்கள்’ சிறுகதைத் தொகுதி மதிப்பீட்டில் எழில் முதல்வன்)