பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வைக்கப்போரும் கடாவடிக்கு

வாக்கப்பட்டவளும்...

பாக்கியத்துக்கு முழிப்பு வந்து ரொம்ப நேரமாயிட்டு. புரண்டு புரண்டு படுத்தாள். குளிரும் ஜாஸ்தி. எரவாணம் வழியாய் ‘சல் சல்'ன்னு பனி வாடை வீட்டுக்குள் எம்பி குதித்தது. வெளியே பட்டப் பகல் போல நிலா. நாளான்னிக்கு மாசி மகம். அதுக்கான வீரியம் இல்லாம்யா போவுதுன்னு நினைத்துக் கொண்டாள். தலைக்கு மேல் கூரையிலிருக்கும் ஓட்டைகளின் வழியாக நுழைந்த நிலாச் சக்கரங்கள் மெல்ல இறங்கி அவள் மேலும், அவளை ஒட்டிப்படுத்துத் தூங்கும் மவள் மீதும் புள்ளி புள்ளியாய்... கால்மாட்டில் பஞ்சாரத்தில் கவித்திருந்த கன்னிச் சேவல் மூக்கை தரையில் தீட்டி றெக்கையைப் படபடத்துக் கொண்டு கூவி ஓய்ந்தது.

அவளால் எழுந்திருக்க முடியவில்லை. உடம்பு ரணமாய் வலித்தது. நேத்தைக்கு விடி கருக்கலில் எழுந்துருச்சிப் போனவள். பொழுதுக்கும் அடிச்ச வெயில் அவள் தலையில். அப்பாடின்னு ஒரு நாழி உக்காரத்தான் நேரமேது? வைக்கல்ல நின்னு வேலப் பாக்கிறதுன்னா சும்மா லேசுபட்ட வேலையா? கை, கால்ல, வைக்கல்ல இருக்கும் ‘சொணை’ ஏறி சுருக் சுருக் என்ற குத்தலோடு அரிப்பு வேறு. எது செஞ்சா என்ன? வெள்ளாமக்கார வங்க விட்டுத் தள்ளிடவா முடியும்? அதிலேயே கெடந்துவெந்து தான் தணியனும்.

‘சோந்து போயிட்டியா பாக்கியம்? இன்னும் கொஞ்சம் வைக்கத்தான் மீதம் கெடக்கு. ஒரே தறியா தெரச்சிப் போட்டுட்டு போயிடுவோம்.

முத்தண்ணன், பாக்கியத்திடம் நைசா பேசிக்கொண்டே வேலை வாங்கினான். இன்னிக்கு நேத்தா இப்புடி? என்னிக்கு அவள் புருஷன், டீ கடைக்காரர் வூட்டுப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடிப் போனானோ அன்னியிலிருந்து தாம் பெத்தப் பொண்ணுக்கிட்ட எப்புடி அன்னியோன்னியமா இருந்து பாதுகாப்பா இருப்பானோ அப்புடித்தானே.