பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

சோலை சுந்தரபெருமாள்


இதுபோல ஒரு புருஷன் கிடைப்பானாங்கிற சந்தோசத்தில அவனைப் பிரிஞ்சி ஒரு ராத்திரிக்கூட... அவன் மட்டும் என்னவாம்? வௌக்கு வச்சுட்டா போதும் சதா காலமும் அவ முந்தாணையப் புடுச்சுக்கிட்டு, அவன் பிடிக்குள் அவள் அன்னியோன்னியப் பட்டுதான் கிடந்தாள்.

தங்கம் பொறந்து கொஞ்ச நாள்ளேயே புருசனுக்கும் டீக்கடைக்கார வீட்டுப் பொண்ணுக்கும் தொடர்பு ஆயிட்டுன்னு அரச புரசலா பாக்கியத்துக் காதில் விழுந்தது. ஒரேயடியா அழுது ரெண்டு நாள் பட்டினி கிடந்த அவளை அவள் புருஷன் கண்டுகொள்ளவே செய்யாமல் ஒண்ணுமே நடக்காதது போலவே அலட்டிக்காம அலட்சியப் படுத்திவிட்டு இருந்தான்.

"நீ பச்சபுள்ளக்காரி. இப்புடி கொலப் பட்டினியா கெடந்தா புள்ளைக்குத்தான் என்னா ஆவும்? ருசி கண்ட ஆம்பளங்க அப்புடி இப்புடின்னுதான் நிக்குங்க. பொம்பளங்க உட்டுதான் புடிக்கனும். புள்ளப் பெத்த ஓடம்பு, வீணா போட்டு அலட்டிக்காத."

பாக்கியத்தைப் பெத்தவள் கேள்விப்பட்டு ஓடியாந்து மவள் பக்கத்திலேயே இருந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு தான் இருந்தாள். தாயா, புள்ளையா இருந்தாலும் வாயிம், வயிறும் வேறத்தானே? எத்தன நாளு பொண்ணு வூட்டுல வந்து உக்காந்துக்க முடியும்? வேற யாரு எவரு இருக்கான்னு இருந்தாலும், சோறு கெடச்ச எடம் சொர்க்கம்ன்னு உக்காந்துட்டா பாருன்னு தானே ஊரு உலகம் சொல்லும்ன்னு நெனச்சா?

"தங்கச்சி! உன்னோட தலையில அப்புடி எழுதிருந்திருக்கு.... கைய ஊணி கரணம் போட்டு பொண்ண ஆளாக்கிப்புடு. என் கையில கெடக்கிறத உனக்கு செய்யாம நாங்க யாருக்கு செய்யப் போறோம்?" சொல்லிப்புட்டுப் போன மறு வருஷமே மவனைப் பத்தியக் கவலையில் இருந்தே தெக்கப் போயி சேந்தாச்சு.

இந்த ஊருலேயே இருந்த பொண்ணப் படிக்க வச்சி பெரிய வாழ்க்கையா அமைச்சுக் கொடுக்கணும்ங்கிற, வைராக்கியத்திலேயே மனச் ஈடுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு நல்ல பக்கத் துணையா முத்தண்ணன்.

இத்தனை வருஷமா எந்த நெனப்பும் இல்லாமல் தான் இருந்தாள். தனக்கும் ஒரு புருஷன் இருந்தான், அவனோட மூணு வருஷம் வாழ்ந்து முந்தானை விரிச்சிருக்கோம்ங்கிற உணர்வே இல்லாமத்தான்... சதா காலமும் மவளே மனசில இருக்கிறப்ப மவ தங்கம் ஆளாயி நின்னுட்டா.

பூந்த, எடத்தில தான் ஒண்ணுமில்லாம போயிட்டு. 'பொறந்த எடத்திலாவது ஒரு மனுஷன் இருக்கிறானா? என்ற கவலை பாக்கியத்தைக் கொத்தி திங்காம் இல்லை.