பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

சோலை சுந்தரபெருமாள்


எடுத்திருந்த போட்டாவைத் தானே அப்பா என்று பார்த்தவளுக்கு இவ்வளவு சந்தோஷமா...

"ஏய்! ராதிகா... தங்கத்தோட அப்பா ஒருத்தி இழுத்துக்கிட்டுப் போயிட்டாராம்டீ. பாவம்டீ அவ, அவ அம்மா தான் அவளுக்கு எல்லாம் செய்யனுமாம்” சிநேகிதிகள் சொல்லும் போது-

'இந்தப் பொண்ணு பாவம். அப்பன் மூஞ்சக் கூட சரியா பாக்குல. கிளி போல இருக்கிற பொண்டாட்டியயும், பொண்ணையும் உட்டுப்புட்டா ஒரு மனுசன் ஓடுவான். அப்புடி என்னாத்த அவகிட்டக் கண்டான்...' அக்கம் பக்கத்தில் உள்ளவங்க அவள் மீது பரிதாபப்படும் போது-

'உன்னோட அப்பா என்ன வேலப் பாக்கிறார்?'ன்னு வாத்தியார்மார்கள் கேட்கும் போது-

பாக்கியத்து மவ தங்கம் எப்படியெல்லாம் தடுமாறிப் போய் அழுதிருக்கிறாள். இனிமே யாரு கேக்க முடியும்? கேட்டா என் அப்பா இந்தா இருக்காங்கன்னு ரெத்தம் தெறிக்கிறது போல சொல்லலாம்ங்கிற பூரிப்பு, சந்தோஷம் குதூகலிப்பாய் தங்கத்தின் முகத்தில்.

மவளைப் பார்த்த க்ஷணத்திலேயே உணர்ந்து கொள்ளத் தெரியாதவளா பாக்கியம்? ஒவ்வொரு தடவையும் மவ வந்து 'அம்மா இப்படி கேட்கிறாங்கம்மா'ன்னு சொல்லும் போது, 'ஏம்மா அப்பா இப்புடி செஞ்சிட்டுப் போனாரு?' எத்தனை தடவை அம்மாவைக் கேட்டு அழுதிருப்பாள்?

மவளை எப்புடி சமாளிக்கப் போறோமோ என்கிற கவலையை நெஞ்சுக்குள்ளேயே போட்டு அடக்கிக் கொண்டு, "ஏண்டி இப்புடி ஓடியாரே?” என்று கேட்ட அம்மாவின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல், "அம்மா...அம்மா...அப்பா வந்திருக்கு, போட்டாவ்ல எப்புடி இருக்கு? இப்ப ரொம்ப எழைச்சுப் போயிருக்கும்மா... நீ எனக்கு வச்சிட்டு வந்த பாலைக் காய்ச்சிக் கொடுத்திட்டு வந்திருக்கேம்மா... ஒண்ணக் கூப்புடத்தான் ஓடியாரேன்.”

பாக்கியம் மவ மனசில் தேக்கி வைச்சிருக்கும் ஆசையை எப்புடி அணைபோடப் போறோம்ங்கிற யோசனையில்... 'ஓப்பன நீ இப்ப தானே பாத்திருக்க? நான் மூணு வருஷம் முந்தாணை விருச்சி வாழ்ந்தவடி'ன்னு சொல்ல நினைத்தாள்.

"தங்கச்சி! நீ கூலியத் தூக்கிக்கிட்டுப் போ. நானும் தம்பியும் கிட்டக்கயிருந்து தெரய வண்டியில ஏத்திவுட்டுட்டு வர்றோம்." பாக்கியம் புருஷனைப் பத்தி ஏதாச்சும் கேட்டுப்புடுவாளோங்கிற நெனப்புலதான் தந்திரமாய் அவளை அனுப்பிவிட அப்புடிச் சொல்லி அனுப்பினான் முத்தண்ணன். இந்த நிலையில் பாக்கியத்தால் எதிர்த்துப் பேச வழி