பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

சோலை சுந்தரபெருமாள்


முடிச்சாரு. ‘கூத்துடா சாமி’ன்னு நெனச்சிக்கிட்டாரு தங்கசாமி. தங்கசாமிக்கி கூட மொட்ட வாத்தியாரு ரெண்டாவது பொண்டாட்டி கட்டிக்கிட்ட சமாச்சாரமெல்லாம் கூடத் தெரியும். அதப்பத்திக் கூட லேசா நெனச்சிப் பாத்துக்கிட்டாரு. மொட்ட வாத்தியாரு மேடையில் ஏறி நடிக்கிற காலத்துல சக்கரவேசமோ, நக்குற வேசமோ போட்டுக்க மாட்டாரு... செத்த நாளி வந்துட்டுப் போற சைடு ஆக்கிட்டும் பண்ணமாட்டாரு. வேசம் கட்டிக்கிட்டா ராஜபார்ட் மட்டும் தான். அவுரு மெயினாக்கிட்டு பண்ணிகிட்டு நடிக்கிறப்பல்லாம் எம்புட்டோ பேர்போன பொம்பளைங்களோடல்லாம் ஆக்கிட்டு பண்ணிருக்காரு. அப்புடி நடிச்சி வர்ற காலத்துல திருவாளூருலேருந்து ஒருத்தி சந்திரா சந்திரான்னு அவுருகூட மெயினாக்கிட்டா நடிச்சிக்கிட்டிருந்தா. அந்தக் குட்டி மொட்டவாத்தியாரு ராகத்துக்கோ நடிப்புக்கோ ஈடுவல்லைன்னாலும், கிட்டத்தட்ட அவுரோட ஒத்துப்போற அளவுக்கு நடிக்கவும் பாடவும் செய்வா. மொட்ட வாத்தியாரு தா நடிக்கிற மேடையிலெல்லாம் அவளதான் ஜோடியா போட்டுக்குவாரு. அப்புடி ரெண்டு பேரும் ஜோடி ஜோடியா நடிச்சிவர்ற காலத்துல ஜனங்க எல்லோரும் அவரையும், அவளையும் சம்பந்தப்படுத்திப் பேசிப்பாங்களாம். இந்த விசியபசியம் மொட்ட வாத்தியாரு காதுக்கும் சந்திரமதி சந்திராவோட காதுக்கும் எட்டிப் போனதுல மொட்ட வாத்தியாரு. கவலைப்பட்டாலும் சந்திரா கவலைப்படலியாம். அவளுக்கு என்னடான்னாக்கா அப்டி கேக்குற சங்கதிபங்கதியெல்லாம் ருசிபசியாயிருந்துச்சாம். பஞ்சுல தீக்குச்சி கொளுத்திவச்சா என்னாவும் கதை...? அப்டிதான் ஆச்சி சமாச்சாரம்.

சந்திரா மொட்டவாத்தியாரு மேல பிரியப்படுற ரகசியத்த நேரடியாவே சொல்லிப்புட்டாளாம். மொட்டவாத்தியாரு லேசுல சம்மதப்படாமருந்தவரு அவ தன் உசுரை மாச்சிக்கிறதுக்காவ மருந்து மாயத்தக் குடிச்சி காப்பாத்திவுட்டு, கதை முத்திப் போச்சி, இன்னிம தாக்குப் புடிக்க முடியாதுன்னு ஒத்துக்கிட்டு கொஞ்ச நாளக்கி அவள வப்பாட்டி மாறி சேத்து கிட்டு வச்சிருந்து அப்றமாதான் ரெண்டாந்தாரம் கட்டிக்கிட்டாரு. நாடாவ கலைஞர்களோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமானதுதான் அப்டின்னு தங்கசாமிக்கும் தெரியும். தங்கசாமி மட்டும் இப்புடிபட்ட புடியில்லாம் இன்னிவரைக்கும் சிக்கிக்கிட்டதுல்ல. வந்தவளை வாடின்னு கூப்ட்டு கீப்ட்டு நாச்சியமா பேசி கீசி என்னமோ அப்டி இப்டி பண்ணிக்கிண்ணி வச்சாலும் வச்சிருப்பாரேத் தவுர, கல்யாண அளவுக்கு சங்கதி முத்திப் போயிர வுட்றலை. கட்ன பொண்டாட்டிகிட்ட கொஞ்சம் பயந்த மனுசனாச்சே என்னா பண்றது?