பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

299


தங்சாமி தனது நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் உள்ளூரு ஆளுங்களோட நாடாவத்துல நடிக்கிறதுக்கு ஆரம்பிச்சிதுலேருந்து பேர் பெத்த எம்புட்டோ பேர்களோட நடிச்சி பாத்துப்புட்டாரு. எம்புட்டோ பாத்திரங்கள்ளயும் ஆக்கிட்டு பண்ணிப்புட்டாரு. ஒன்னுலயும் சோட போனதுல்ல மனுசன். அவுருகிட்ட இருந்த தெறமைகளை மொட்ட வாத்தியாரு மட்டும் கண்டுபுடிக்காட்டி வய வாய்க்கான்னு விவசாயத்துலதான் ஈடுபட்டுப் போயிருப்பாரு. நாடாவம் நடிக்க ஆரம்பிச்சி அவுருக்கு பேர் கெடச்ச பொறவு அவுருக்கு விவசாயம் பண்றதுலல்லாம் நாட்டமே வந்ததுல்ல. கோடை எப்ப பொறக்கும் கொட்டாவ எங்க போடுவான் அப்டின்னுதான் எதுபாத்துக்கிட்டு கெடப்பாரு. வருசத்துல ஆறுமாசம் கையையும், காலையும் கட்டிப் போட்டாப்புலதான் இருக்கும். திண்ணையில குந்தி ஆசதீர பாடிகிட்டிருப்பாரு. உணர்ச்சிவசப்பட்டு வசனம் கூட பேசிப்பாக்குறதும் உண்டுதான். அவுரு பாட்டையும், வசனத்தையும் கேட்டு ஊரு ஜனங்க வேல வெட்டிகளை வுட்டுபுட்டு செத்தநேரம் கேட்டு பாராட்டிப்புட்டு போய்ச் சேருவாங்க. பொண்டாட்டிக்காரி பெருசா கத்தி நாறடிப்பா. ‘கஞ்சிக்கி கதியத்த நாயிக்கி பாட்டும் கூத்தும்தான் மிச்சம்’ன்னு அத்தோடயா வுடுவா...? ‘கூலிக்காரனுக்கு வாக்கப்பட்டு, போயிருந்த கா வவுத்து கஞ்சிநாச்சும் தட்டுப்படாம கெடைக்கும். இந்த மனுசனக் கட்டிக்கிட்டு அதுக்கும் வக்கத்துப் போச்சி’ம்பா, பொண்டாட்டி வசது செத்தநேரத்துக்கு குறுகுறுன்னுருக்கும். அவ சொல்றதுல நாயமுல்லாமலாயான்னு தன்னையேக் கூட நொந்துக்குவாரு. அவிரு வயித்துப் பாட்டப் பத்தியெல்லாம் ஒருநாளும் கவலப்பட்டுகிட்டதே இல்ல. பாட்டும் கூத்தும் தான் அவுருக்கு சோறு தண்ணி எல்லாமும். கத்தி சிரிக்கடிக்கிற பொட்டாட்டிகிட்ட 'கவலைப்படாம கெட்டி குச்சிவூட்ட இடிச்சி மச்சிவூடா கட்டத்தான் போறன். சீக்கிரத்துல நீயும் நானும் சேந்தர்னயா கார்ல போற டயத்தப் பாரு' அப்படின்னு ஆள அசமடக்கிப்புடுவாரு.

வூட்டுக்குள்ள அடுப்பு எரியறதும், எரியாததும் பொண்டாட்டி சாமார்த்தியதுலதான்... அவ மட்டும் வேலவெட்டிக்கி போவாட்டி நடக்குமா பொலப்பு? தங்கசாமியோட பொண்டாட்டி இப்டி கன்னாப்பின்னான்னு கத்துனாலும் கொண்டாலும், அடி மனசுக்குள்ளார கொஞ்சம் எரக்க சுபாவம் உள்ளவதான். கூத்தாடுற மனுசனக் கட்டிக்கிட்டு நாளும் அவதிப்படுறது ஒரு பக்கத்துல இருந்தாலும், இப்டி நாலு ஜனம் பெருமைபடுத்துறாப்பலயும், மரியாதை மனுசன் தனக்கு கெடச்சாரே அப்டின்னு சமயங்கள்ல சந்தோசப்பட்டுக்றதும் உண்டுதான். அவுரு சொன்ன மாறி காரூல ஏறி போறதுக்கு கனவு காணலன்னாலும், கட்ட வண்டில போறதுக்காவதும் டயம் வராமலயா போயிரும் அப்படின்னுதான்