பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

309


தங்கசாமி ஓஞ்சிப்போயி வூட்ல குந்திட்டப்புறம் இதெல்லாத்தையும் வரிசை வரிசையா நெனச்சிக்கிறாரு... அம்பது வருசம் எப்புடி ஓடிப்போச்சி பொழுது...‘ லோகிதாசனா நேத்தக்கி வசனம் கட்னாப்புல இருக்கேன்னு...’ அருவியா கண்ணீரு கொட்டுது... அம்பது வருசமா ஒளச்சிபுட்டு கட்ன துணிக்கி மாத்துதுணிக் கூட கட்ட கதியில்லாமப் போச்ச அப்புடிங்குற கவல நெஞ்சுல வண்டி வண்டியா தேங்கிக் கெடக்க இப்ப நெனச்சி முடியுமா இன்னமத்தான் சம்பாரிக்க முடியுமா? இப்பல்லாம் முந்திக்கி மாறி அவுரால கொரலை ஒசத்தி பாடமுடியல; எம்புட்டுக்கு தான் எவ்வுனாலும் தொண்டைக்குள்ளார ஏதோ கெடந்து அடச்சிக்குது. இவுரு கொரலு ஒடுங்கிப் போயி குந்திட்டாருன்னு முந்திக்கி மாறி எந்த ஊர்தேசத்துலருந்தும் வந்து இரவு நாடாவம் பழக்கிகுடுக்க கூப்டுறதில்லை. இவுரு ஒசரத்துக்கு வளந்து நிக்கிற ரெண்டு மவனை அண்டித்தான் சொச்சக்காலம் ஓடப் போவுதோன்னு நென்க்கிறப்ப கவல பத்திக்கும். மவங்காரனுங்க சோறு போட்டாலும் மருமவளுவ வுடுவாளுவளா அப்டிங்குற கவலதான். ஒரு ஆபிசு உத்தியம்தான் பாத்தமா கடைசியா கெடைக்கிற பிஞ்சினு பணத்தவச்சி காலத்த ஓட்டலாம். ஒரு ஏக்கரு நஞ்சையோ, புஞ்சையோ வாங்கிப் போட்ருந்தாகூட உளுது சாப்ட்டுக்கலாம்... ஒன்னுமுல்லாத அப்ராணியா போயித்தமே... ஒரு டீ தண்ணி குடிக்கனுமுன்னாலும் புளிக்கிற வாயிக்கி வெத்தலப் போட்டுக்கலா முன்னாலும் மவனுவகிட்ட கையேந்து நிக்கிற காலம் வந்து போச்சே... பொண்டாட்டிக்காரி துப்புறான்னா ஏந்துப்பமாட்டா?

இன்னிக்கு அப்படிதான் பொண்டாட்டிக்காரி தட்டுல சோத்தப் போட்டு நாய்க்கி வச்ச மாறி வச்சிபுட்டு சாப்டுன்னா... அவ சோத்த வச்சிப்புட்டு போன ரோக்கிதியப் பாத்தா சாப்ட மனங்கொள்ளல. பட்டினியா கெடந்து செத்துப் போயிரணும்னு கூட நெனச்சிக்கிட்டாரு. அப்பத்தான் பாருங் ‘கொளா’ சட்ட போட்ட ரெண்டு பேரு வந்து ‘நாடாவ வாத்தியார் தங்கசாமி’ ஆருங்கன்னு இவுருகிட்டயே வந்து விசாரிக்கவும் இவுரு என்னமோ ஏதோன்னு பதறிப்போயி; ‘நாந்தான் நீங்க ஆரங்கய்யான்னு’ பதுவுசா கேட்டாரு. “நாங்க கலைட்டரு ஆபீஸிலேருந்து வர்றம். கெவுருமுண்டு. நீங்க நாடாவத்துக்காவ ரொம்பகாலமா ஒளச்சிருக்கீங்க அப்டிங்கறதுக்காவ மாசாமாசம் ஒங்க காலம் பரியந்தொட்டும் நானூறு ரூவா குடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுருக்குது. அதான் நீங்க ஆரு எவுருன்னு சொல்லி விசாரிக்க வந்தம் அப்டின்னு சொல்லவும் இவுரு வந்தவுங்களை திண்ணையில குந்தச் சொன்னாரு. ரொம்ப தூரத்துலருந்து வந்தவுங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கீப்பித்தண்ணிகூட வாங்கிக்குடுக்கக் கூட கெதியில்லாமருக்கனேன்னு நொந்துக்கறாரு.