பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

சோலை சுந்தரபெருமாள்


பொண்டாட்டிக்காரி என்னடா பணங்காசுன்னு பேச்சு அடிபடுதே அப்படின்னு வூட்டுக்குள்ளேருந்து வெளியில வந்தவ வந்தவுங்களுகிட்ட விசியத்தக் கேட்டு சந்தோசப்பட்டு போயித்தா. புரஷங்காரரு இம்புட்டுக் காலமா ஒளச்சதுக்கு இப்பத்தான் பலன் கெடச்சிருக்கோன்னு மனசுக்குள்ள நிம்மதி, இன்னம மவனுவள நம்பி காலம் ஓடாதுல்ல அப்டின்னு நெனச்சிக்கிறா. தங்கசாமி இப்பத்தான பொண்டாட்டிக்காரிய பெருமையாவும் அதே சமயத்துல வீம்பாவும் பாக்குறாரு. எவனோ ஒரு படிச்ச மனுசன் போன வருசத்துல சலுகைக்காவ வேண்டி கலைட்டரு ஆபீசுக்கும் மொதலமைச்சருக்கும் மனு எழுதிக்குடுத்து போடச் சொன்னாரு. அவுரு கைப்பட எழுதிபோட்டதுல வந்த பலனோ இதுன்னு தங்கசாமி புரிஞ்சிக்கிறாரு. ‘அடுத்த மாசத்துலேருந்து ஓங்களுக்கு மாசாமாசம் பணம் வரும்னு’ சொல்லிபுட்டு ஏதேதோ பேப்பருல தங்கசாமிகிட்ட கைநாட்டு வாங்கிகிட்டு போயிடுறாங்க. பொண்டாட்டிக்காரி தங்கசாமியப் பாத்து ‘ஏங்க சோத்த திங்கலியா ஈமொச்சிகிட்டுகெடக்கே... கொளம்பு ஊத்தட்டா ஊருகா வய்க்கட்டுமா’ அப்புடின்னு பாசமா கேக்குற மாறி கேக்குறா. எல்லாம் தங்கசாமிக்கு புரியிது. பணத்ததான இவ மதிக்கிறா... புருஷங்கிட்ட இருந்த தெறமையை அறியலியே அப்டின்னு மனசு நொந்துக்குறாரு. இப்பவும் கூட - இவுரு பணத்த பெருசா நெனைச்சுக்கலை. தான் செத்தப் பொறவு முட்டம் பெரியசாமி மாறியோ, டேப்பு கதிரேசம்புள்ள மாறியோ காக்காமுளி கோயிந்தசாமிபுள்ள மாறியோ தன்னயும் ஊருசனம் பெருமையா எடுத்துகிட்டு பேசிகிட்டிருக்குமா அப்டின்னுதான் கவலப்பட்டுக்குறாரு.. அப்புடி பெருமையா பேசிகிட்டாங்கன்னா அது. மட்டும் தான் இம்புட்டு காலமா நாடாவத்துல ஒளச்சதுக்கான பலன் அப்டின்னு நெனச்சிக்கிறாரு. பொண்டாட்டியப் பாத்து “எனக்கு பசிக்கலடி சோத்த எடுத்துட்டுப் போயிரு” அப்டின்னு சொல்லிகிட்டே நாடாவப்பாட்டை தனக்கு பிரியமான பாட்டை ராகம் போட்டு பாடுறாரு.... இஷ்டமேனிக்கு பாடுறாரு... கொரல் ஓடையாம பாட்டு வருது. பாட்டக்கேட்டு சனம் கூடுது... தனக்கு இப்பயும் ஓச்சல்ல ஒளிச்சல்ல தொண்டயும் கொரலும் உள்ளவரைக்கும் சாவுற தொட்டும் பாட முடியும்னு தெம்பா நெனச்சிகிட்டவரு... இப்பெல்லாம் ஊருதேசத்துல நாடாவம் போடுறது வுட்டு புட்டு டீவி பெட்டி வக்கிறானுவளாமே... சினிமா காட்டுறானுவளாமே... அதெல்லாம் எதுக்கு... ஒரு நாடாவத்துக்கு ஈடாவுமா அம்புட்டும்னு நெனச்சிகிட்டு பாடிகிட்டே கெடக்காரு. சனந்தான் பாட்டக்கேக்க வந்துருச்சுல்ல பாடாம என்னா பண்ணுவாரு மனுசன். பொண்டாட்டிக்காரி பணங்கெடச்ச சந்தோஷத்துல பாடுறாரே அப்டின்னு நெனச்சிக்கிட்டே சோத்த எடுத்துகிட்டு உள்ளாரப் போறா... அறியாதவ அதத்தான் நெனப்பா?