பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

சோலை சுந்தரபெருமாள்


நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி, நீதிமன்றத்தில் அன்றையதினம் ஜோடிகள் கூட்டம் எக்கசக்கமாக நின்று கொண்டிருக்கவே விஷயம் புரியாமல் முழித்திருக்கிறார். பிறகு ஒருவாறு, தெளிந்து அவர்களிடம் ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் நீங்கள் தவறான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். இது திருமணம் பதிவாளர் அலுவலகம் அல்ல. இது நீதிமன்றம்!’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த ஜோடிகள் கோரசாக, ‘சாரி மிலாட்! இது நீதிமன்றம் என்று தெரிந்துதான் வந்திருக்கிறோம். நாங்களெல்லாம் ‘டிவோர்ஸ் வாங்க வந்திருக்கும் ஜோடிகள்’ என்று சொல்ல அதிர்ந்து போனாராம் நீதிபதி.

சண்டை எல்லாம் முடிந்து தெரு அமைதியான பிறகு, என் மனைவி நல்ல மூடில் இருக்கிறாளா என்பதையும் சோதித்து அறிந்த பிறகு சண்டையைப் பற்றி தெரிந்துக் கொள்ள அவ்வளவாக ஆர்வமில்லாதவன் போல் ஏதோ எதேச்சையாகக் கேட்பவனின் ‘தொனியை’ சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டு விசாரித்தேன்.

“கேக்கலேன்னா உங்களுக்கு மண்டை வெடிச்சிடும்னு எனக்குத் தெரியும்... விஷயம் ரூபவதியின் புருஷனுக்குத் தெரிந்து விட்டது. அதுதான் ரகளை” என்றாள்.

இதுமாதிரி விஷயத்தில் மட்டும் கணவனுக்குத்தான் கடைசியில் தெரிகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு சண்டை தினமும் தொடர்ந்து ‘உன் மனைவியைக் கண்டித்து வை’ என்று சண்முகத்தின் மனைவியும், ‘உன் புருஷன் இங்கே இனிமேல் வந்தால் அவன் குடலை உருவி விடுவேன்’ என்று ரூபவதியில் கணவனும் பரஸ்பரம் மிரட்டிக் கொண்டார்கள்.

இப்போதெல்லாம் தெருவாசிகள் யாரும் சண்டையை விலக்கி விடப் போவதில்லை. சண்டை முடிந்து கடைசியில் சண்முகத்தின் மனைவி தெரு மண்ணை வாரி வாரி இறைத்துவிட்டுப் போவாள். இவ்வளவுக்கும் அவளுடைய ஒரு வயதுக் குழந்தை அவள் இடுப்பிலேயே தொற்றிக் கொண்டு கிடக்கும்.

இவ்வளவு சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோதும், சண்முகத்தின் சைக்கிளை எதிர்வீட்டில் நான் பார்க்கத் தவறியதில்லை.

“இப்போது எல்லாம் பகல் பூராவும் சைக்கிள் எதிர் வீட்டிலேயே தான் கிடக்கிறது” என்று நான் கேட்காமலேயே சொன்னாள் என் மனைவி.

இப்படி இருந்து கொண்டிருக்கும் போதுதான், ஒரு நாள் சண்முகத்தை போலீசார் வந்து அழைத்துக்கொண்டு போனார்கள். ரூபவதிதான் தன்னை தினமும் வீட்டுக்கு அழைக்கிறாள் என்றும், அவள் தனக்கு எழுதிய கடிதங்களே