பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

319


பார்த்து பார்த்து பெருமூச்சு விட்டபோது, மனம் பொறுக்காத மேகங்கள் ஈட்டிய கருணைப் பொழிவினால், முற்றிய நாற்றைப் பிடுங்கி, அதன் பருவம் தப்பியதற்கு தாங்கும் வகையில் அதிக உரம் போட்டு நட்டு ஒருவாரமே ஆன ‘குழந்தைப் பயிர்கள் தான்’ இப்போது வயல் முழுவதும்.

எந்த மழையின் உதவியில் நட்டார்களோ அதே மழையின் ‘அபரிமித’ அன்பினால் இப்போது பயிர் தெப்பலாடுகிறது.

ஒருநாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு... புதிய சாகுபடி தான்.

அதற்கு யாரால் முடியும்...? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள்.

மறுபடியும் என்றால்... தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய.

என்ன செய்யலாம் என்று மருதனுக்குள் ஆயிரம் யோசனைகள்.

கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் ‘கீழ்க்குமிழி’ மட்டுமல்ல ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்து தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டா மணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு.

பயிர்கள் மூழ்காமல் மொத்தக் கிராமமும் தப்பித்துக் கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு.

‘இந்தப் பேய்ச் செடிகளை பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுதும் வடிந்துவிடும்.’

‘சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா என்ன...!’

இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.

நடந்தவனின் பார்வை; வடிவாய்க்கால் வளைவில் வலை போட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்தது. நின்றான்.

“இந்தச் சனியன் பிடிச்ச காட்டாமணக்குச் செடியால தாண்டா தண்ணி வடியமாட்டேங்குது...”

மாரி இவனைத் திரும்பிப் பார்த்தான்.

“யாரு இல்லேன்னா ...”

“அதிலும் நம்மூரு வடிமதகு இருக்கே... அது வெள்ளைக்காரன் காலத்துலே நம்மூருக்குன்னே ரொம்ப டெக்னிக்கா கட்டுனது. கடலே திரண்டு வந்து உள்ளே நுழைஞ்சாலும் அப்படியே முழுங்கிட்டு ‘கம்’முன்னு இருக்கும், தெரியுமில்ல ....!”