பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

சோலை சுந்தரபெருமாள்


“யாரு இல்லேன்னா ...”

“ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும்.”

இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. பிறகு வலையை வாய்க்காலுக்குள் இறக்குவதும் தடம்பார்த்து மேலே தூக்கி, துள்ளும் கெண்டை மீன்களை அள்ளி பக்கத்திலிருந்து மீன் கூடைக்குள் போடுவதுமாக காரியத்திலிலேயே கண்ணாயிருந்தான் மாரி.

பொறுமையிழந்து போனான் மருதன்.

“ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.”

“தெரியுது... ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற, ... நானென்ன சொல்ல முடியும்...”

“எதுடா நடக்காத காரியம்.”

“சரிசரி. எதுக்கு இப்படி கோபப்படறே. முதல்லே ஊரை ஒண்ணு கூட்டி காரியத்தை ஆரம்பி. மத்ததை நீயே தெரிஞ்சிக்குவே...”

“ச்சே... நீயெல்லாம் ஒரு மனுஷன்... முதமுத உங்கிட்ட வந்து கேட்டேன் பாரு... என்னைச் சொல்லணும்...”

கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.

கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடைபாதை வரப்பு, இருபுறமும் முழ்க இருக்கும் பயிர்கள். ஒரு வார மழையால் பருவப் பெண்ணைப் போல் இடையிடையே பசுமை பூரித்துப் போய் நிற்கும் கருவை மரங்கள். மடித்துக் கட்டியிருந்த பழைய கைலி, பனியன் மீதெல்லாம் சேறடிக்க, ‘சௗக்புளக்’ கென்று நடந்து கொண்டிருந்தான்.

வழியில் வீரன்கோவில் குளம். கரை நெடுக தண்ணீர்க் குளியலில் மினுக்கியபடி நிற்கும் தென்னைகள். இரவு வந்துவிட்டதாய் நினைத்து அவசரமாய் பூத்துச் சிரித்தபடி குளம், முழுக்க பூத்திருக்கும் செவ்வல்லிகள்... இவை எதுவும் மருதனின் மனதைத் தொடவில்லை.

குளக்கரை மேட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மாக் கிழவி தான் கண்ணில்பட்டாள்.

“ஏ. .. ஆத்தா. .. இந்த அடிச்சு ஊத்துற மழையிலேகூட புல்லறுக்க வந்துட்டியாக்கும். நீ ஆடு, மாடு வளத்தாதான் உன் வயத்துக்கு, சோறு கிடைக்குமாக்கும்...”

கிழவி மருதனை பார்த்து நொடித்தாள்.

“போடா...போக்கத்தவனே...! சோத்துக்கு வக்கில்லாம இல்லேடா.... கையை காலை மடக்கிட்டு வீட்லே முடங்கிக்கிடந்தா