பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

321


சோறு எப்படிடா வயத்துக்குள்ளே இறங்கும்...?”

“அடேங்கப்பா... கோபத்தைப் பாரேன். .. சரி. சரி. உங்க வீட்டுக்காரரு எங்கேயாம்...?”

“எதுக்கு... அதோ அந்த பூவரச மரத்தை அண்ணாந்து பாரு... ஆட்டுக்கு தழை ஒடைச்சுக்கிட்டிருக்காரு...”

கிழவிக்கே எழுபது வயதிருக்கும். அதைவிட ஐந்து வயதாவது கூடுதலாக இருக்கும் கிழவனுக்கு. அவரோ நடுக்கும் சாரலில் பூவரச மரத்தின் உச்சாணிக் கொம்பில்.

மருதனின் மனத்திற்குள் ஆச்சரியம் பூத்தது.

கிழவன் காளியப்பன்தான் ஊரிலேயே பெரிய மிராசு. ஏராள நிலம் நீச்சு. வீடு வாசல் ஆள்மாகானம் என்ற அமோக வாழ்க்கை. இதுவே இன்னொருவனாயிருந்தால் இந்நேரம் ஈசிச் சேரில் சாய்ந்தபடி வெற்றிலை குதப்பிக்கொண்டு ஊர் அக்கப்போர் பேசிக் கொண்டிருப்பான். கிழவனால் அப்படி முடியாது.

“பெரியப்பா ...!”

குரல் சேட்டு, கோவணக்கட்டும், தலையில் முண்டாசுமாய் இருந்த கிழவர் முகத்தை மறைத்த பூவரசக் கிளைகளை ஒதுக்கிக் குனிந்து பார்த்தார்.

“யாரது....”

“நான்தான்... மருதன்”

“என்னடா ...”

“வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத் தானே வடிஞ்சாகணும். மேற்கொண்டு மழை பேயணும்கூட அவசியமில்லே... ராத்திரிக்குள்ளெ எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா, அவ்வளவுதான் இப்பவே எல்லாப்பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான்.”

“வாஸ்தவம்தான்... அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே. என்ன பாவம் செஞ்சோமோ இந்த ஊர்ல வந்து பொறந்து தொலைச்சிட்டோம். அனுபவிக்க வேண்டியதுதான்...”

“பாவ புண்ணியமெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் பெரியப்பா. முதல் காரியமா இன்னைக்கு ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணுகூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும்.”

கிழவரின் புருவம் ஏறி இறங்கியது.

“என்னன்னு ...?”

“விடிஞ்சதும் வீட்டுக்கொரு ஆள் அரிவாள் மம்பட்டியோட வடிவாய்க்காக்கரைக்கு வந்துடணும். ஒரு செடி பூண்டு இல்லாம அரிச்சு எறிஞ்சுட்டா பொட்டுத் தண்ணியில்லாம வடிஞ்சிடும்’னு சொல்லணும்...”

கிழவர் மெதுவாய் மரத்திலிருந்து கீழே இறங்கினார்.