பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

323


“நாம நினைக்கிற காரியத்துக்கு இவன் தான் பொருத்தமானவன்.” முகம் மலர பிரேம்குமாரை வழி மறைத்தான்.

“என்னண்ணே ...” சிரித்தபடி பிரேம்குமார்.

கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி பிரேமிடமிருந்து சட்டென்று எந்த பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.

“மருதண்ணே ... நீங்க சொல்ற வேலையை செய்றதுக்குன்னே ‘பி டபிள்யூ, டின்னு’ கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க.”

மருதனின் முகம் சிறுத்துப் போய் விட்டது.

“நானே கூட நாளைக்கு என்ஜினியரைப் பாக்கலாம். ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு நாளைக்கு மூச்சு விட முடியாத வேலை. எங்க ‘தலைவருக்கு’ பிறந்தநாளு. அதுக்கு அன்னதானம்... ரத்ததானம்னு நிறைய வேலை. உங்களுக்கே தெரியும் ‘அவரோட’ ரசிகர் மன்றத்துக்கு நான் தான் தலைவருன்னு. பிறந்தநாள் விழா முடிஞ்சதும் நீங்க சொல்ற மாதிரி ஏதாவது செய்வோம். வரட்டுமாண்ணே. எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க.”

மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் போய்க் கொண்டேயிருந்தான்.

இதற்குப் பிறகும் மருதனால் கம்மாயிருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கியில்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லி புலம்பினான்.

அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை.

மனமும் உடம்பும் சோர்ந்து போய் வீடு திரும்பிய மருதனை அல்லி பதட்டமாய் எதிர் கொண்டாள்.

“என்னது. ஏன் என்னமோ மாதிரி இருக்கே மாமா. உடம்பு கிடம்பு சரியில்லையா...”

அவனது கழுத்து, முகமெல்லாம் தொட்டுப்பார்த்தாள்.

“ம்ஹீம்... உடம்புக்கு ஒன்றுமில்லே... மனசிலேதான் ஏதோ ...”

நொடிப் பொழுதில் புரிந்து கொண்ட அல்லி உள்ளே ஓடினாள். அப்போதுதான் வடித்த சுடுகஞ்சியில் இரண்டுகல் உப்பைப் போட்டுக் கலக்கி எடுத்து வந்தாள்.