பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குளம்


ருக்குள் நுழைந்தபோது அவனுக்குத் தென்பட்ட முதல் மாறுதல் அந்தக் குளத்தில்தான். கௌதமன் குளம் என்று அதற்குப் பெயர் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்துவிட்டு அந்த சாபத்தினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக்கொள்ள இப்படியொரு குளத்தை உண்டாக்கிய முனிவன் இதில் மூழ்கிக் கரையேறியதாகக் கதை கூடச் சொல்வார்கள். தண்ணீரே இருக்காது. மழைகாலத்தில் கூட சேறும், சகதியுமாய் சுற்றிலும் கோரைப்புற்கள் மண்டிக்கிடக்க அசிங்கமாய்க் காட்சியளிக்கும் தூரத்தில் வரும்போதே காற்று வாக்கில் அங்கிருந்த ஒருவித துர்க்கந்தம் வீசும்.

இப்போது அந்தக் குளம் வெகு சுத்தமாக இருந்தது. தண்ணீர்ப் பளிங்காய்த் ததும்பி வழிந்தது. நான்கு பக்கமும் படித்துறை வேறு குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டு வெகு நேர்த்தியாய் பராமரிக்கப்பட்டிருந்தது. ‘குடிதண்ணீர் குளம் அசுத்தம் செய்யாதீர்’ என்ற மிரட்டலான அறிவிப்புப் பலகை வேறு.

இவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. இந்தப் பதினைந்து வருஷத்தில் ஊர் வெகுவாக மாறிப்போய் இருக்கும் என்பதற்கு முதல் குறியாக இதைக் கொண்டான். இத்தனை காலமாய் மனம் முழுவதும் நசநசத்துக் கொண்டிருந்த கசப்பிற்காக சற்று நாணம் கூட ஏற்பட்டது.

பிறந்த மண்ணை தான் வெறுக்க முடியுமோ? வெறுப்பதற்கு எத்தனை சாக்குகளைக் கற்பித்துக் கொண்டாலும் அதெல்லாமும் நிஜமாக இருக்கமுடியுமோ? கையைக் குத்தியதற்காக இதழ்களைப் பிய்த்துப்போடும் ஆவேசம் - ஆவேசமென்ன மூர்க்கம் - மூர்க்கமென்ன அநாகரிகம்.

அந்த அக்ரகாரத்திலேயே அவன் தான் அழகாக இருப்பான். அழகென்றால் கண், மூக்கு, காது முகமென்று - அளவாக - இருக்கவேண்டிய அளவிற்குச் சற்றும் கூடாமலும், குறையாமலும் - சுருள் சுருளான முடியும் பரந்த மார்பும் -