பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

சோலை சுந்தரபெருமாள்


என்றெல்லாம் இருக்கும் அழகல்ல. அது ஒரு மாதிரி. பார்த்தவர்கள் மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டுகிற வருணிப்புகளுக்குள் அடைக்க முடியாத ஒருவகையானது. அவன் முதல் முதல் அங்கு கிராப் வைத்துக் கொண்டான். மீசை வைத்துக் கொண்டான், ரயில்வே ஸ்டேஷன் சாயபு ஓட்டலில் கோழிப் பிரியாணி சாப்பிட்டான்.

எப்படியாவது கெட்டுத் தொலையட்டும் என்று மற்றவர்களால் வெறுமே இவனை ஒதுக்கிவிட முடியவில்லை. இவனை ஒதுக்க ஓதுக்க அவர்களே பாதிக்கப்பட்டார்கள். அவன் தனியனானான். எல்லோரும் நன்றாய் பெரிய வியூகம் வகுத்துக்கொண்டு இவன்மேல் படையெடுத்தார்கள்.

இதோ தெரியும் இந்த ஆலமரத்தடியில்தான் சாமாவையர் அவனைக் கட்டி வைத்து அடித்தது. பாவம் சாமாவையரை குற்றம் சொல்லமுடியாது. எத்தனை வருஷங்களாக அந்த நெருப்பு உள்ளுக்குள்ளேயே கணன்று கொண்டிருந்திருக்கும். இயலாமை-பெண்டாட்டியைக் கண்டிக்கத் தக்க ஆரோக்கியமான துணிவை அவருக்குத் தரவில்லை.

ஏதோ ஒரு பொழுதில் ஏதோ ஒரு சாக்கில், ஒருநாள் இவனை வளைத்துவிட்டார். பிள்ளையார் கோவில் மேடையில் ஊர் நியாயஸ்தர்கள் முன்னிலையில் மொத்து மொத்து என்று மொத்தினார்.

“திருட்டு படவா... எங்காத்துப் பிள்ளையாட்டமா வந்து போயிண்டிருந்தியேடா. மேஜையிலே வச்சிருந்த வைரமோதிரத்தை நீதானேடா எடுத்தே. நீதானேடா எடுத்தே... மூவாயிரம் ரூவாடா... உழைச்சு சம்பாரிச்ச சொத்துடா பாவி” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். ஆவேசம் வந்தவர்போல் இவனை கிழித்துப் போட்டார்.

இவனுக்கும் தெரியும், ஊருக்கும் தெரியும், சாமாவையருக்கும் தெரியும். ரொம்ப சாமர்த்தியமாக அந்த விஷயத்தைக் கையாண்டார்கள். ஒரு கலாச்சார மரபை மீறியவனுக்கு தண்டனை ஏற்றி வீழ்த்தி விடத் துடித்து வைரமோதிரம் வைரமோதிரம் என்று ஊரே முனுமுனுத்தது.

செடிமறைவிலும், சாக்கடை ஓரத்திலும், இருண்ட கோயில் பிரகாரத்திலும் ஏகாந்தமான தோப்புகளிலும் ஏன் அன்று நாறிக்கொண்டிருந்த கௌதமன் குளத்து மேட்டிலும் கூட ஒவ்வொரு தடவையும் வியர்வையைத் துடைத்துவிட்டுக் கொண்டும் இவனுடைய , தலைமயிரைப் பிய்த்து விடுபவளைப் போல அளைந்துகொண்டும் துடிப்போடு சொல்லுவாள் கல்யாணி. செற்களல்ல அவை. அவளுக்கும், அவனுக்கும் கூட அந்த கணத்தில் அவைதாம் சாத்தியங்கள்.