பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

331

விசாரிக்கும் இவனுடைய காயத்தை மேலும் மேலும் கிளறியது.

“ரங்கஸ்வாமியா...கல்யாணி கூட உன்னை வுட்டுட்டு ஓடிப்போயிட்டாளாமேடா... கேள்விப்பட்டேன் நெஜந்தானா-

சந்தோஷப்படும் முறை இப்போது அவளுடையது. இவனது காயத்தை கிளறிவிட்டு குஷிப்பட அவர்களிடம் கைவசம் அம்புகள் நிறைய இருந்தன.

நா வறண்டது. வயிற்றில் லேசாக நெருப்பு புகைந்தது. விடுவிடுவென்று நடந்தான்: வேதபாடசாலை வெராண்டாவில் ஏழெட்டு இளம் பையன்கள், சின்னக் குடுமியும் அழுக்கு வேஷ்டியுமாக உட்கார்ந்து தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள்.

பூதம் ஜதிஷ்யே புவனம் வதிஷ்யே தேஜோ வதிஷ்யே தபோ வதிஷ்யே பிரம்ம வதிஷ்யே... ஓம் சாந்தி சாந்தி சாந்தி- உச்சந்தலை வழுக்கையைத் தடவிக்கொண்டே எந்திரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்த ராமச்சந்திரசர்மா தெருவோடு போகும் இவனைப் பார்த்துவிட்டு அவசர அவசரமாக எழுந்து வந்தார்.

“ஏண்டாப்பா... நீ வந்திருக்கேன்னு கேள்விப்பட்டேன். ஏன் இப்படி...கறுத்து இளைச்சு மார்க்கூடெல்லாம் பின்னிப் போய் என்னமோ வியாதிஸ்தன் மாதிரி... போயிட்டே. அந்தக் கல்யாணி முண்டை கூட இன்னொருத்தனோட ஓடிப்போயிட்டாளாமே நிரந்தரமான சந்தோஷம்னு ஒண்ணு இருக்காடா இந்த பூமியிலே. அதைப் புரிந்துக்காமா தாம் தூம்னு குதிச்சா இப்படித்தான்...”

அவரை உற்றுப் பார்த்தான்.. அதே பழைய ராமச்சந்திரசர்மா தான். பழுப்புக் காவி வேஷ்டியும் அசட்டுச் சிரிப்பும், வெற்றிலைக் காவியேறின பற்களும், திறந்து மூடும் போது எச்சில் நூல்கள் இரண்டு உதடுகளையும் இணைத்து வேடிக்கை காட்டும் அசிங்கமும் - இந்தப் பிரதேசத்தில் வழியாகத்தான் வேதங்கள் வெளியே வருகின்றன என்ற விஷயமே. இவனுக்குச் சங்கடத்தை தந்தது.

யாரோ ஒரு கருணையுள்ள மொட்டைப் பாப்பாத்தி எழுதிவைத்த சொத்தில் இன்னும் நடந்து கொண்டிருந்த வேதபாடசாலை அது. சோற்றுக்கு அல்லாடும் ஏழை பிராமணக் குடும்பத்துப் பையன்கள். அங்கே எல்லாரும் புனித பழைய சோற்றைத் தின்றுவிட்டு சூனா வயிறு தட்டிப்போய் குழிவிழுந்த கண்களும், முன் துருத்திய நெஞ்சுமாய் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பள்ளிக்கூடம் போகும் இதர பையன்களின் கிராப் தலைகளை ஏக்கத்தோடு பார்ப்பார்கள். அந்தக் கண்களில் சினிமாக் கனவுகள் மண்டிக்கிடக்கும்.