பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

333


ஏகமாக வைத்துக் கொண்டிருந்தார். ஊரில் எதற்கெடுத்தாலும் முன்னால் வந்து தாம் தூம் என்று குதிப்பார். கல்யாணிகூடச் சொல்லுவாள். “இது பொல்லாத கிழம் ரங்கு. சன்னதியிலே விபூதி கொடுக்கிற சாக்கிலே ரகசியமாக் கையைக் கிள்ளும். மாமி ஊருக்குப் போயிருக்கா. ஆத்துப்பக்கம் வந்துட்டுப் போயேண்டி...” என்பாராம்.

காலம் மனுஷ உருவங்களில் செய்த மாற்றத்தைத் தவிர, வேறில்லை இங்கே. தெஞ்சின் காயம் அகலமானதுதான் மிச்சம். இனிமேலும் இங்கே அன்னியமாய் நின்று கொண்டிருப்பது அர்த்தமாற்றதாகப்பட்டது. விடுவிடுவென்று நடந்தான். ராகவன் பிள்ளை டீக்கடை தென்பட்டது. டீக்கடைக்காரன் இவனை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தான்.

“என்ன ஐயரே, எப்ப வந்தே. தளதளனு இருப்பியே... ஆளே உருமாறிப் போயிட்டே...”

“ம்...” என்று தலையை ஆட்டினான்.

“அந்த பாப்பாத்தி ஒன்ன வுட்டுட்டு ஓடிடுச்சாமே... கவலைய விடு சாமி. வளியா வந்த கழுதைங்களே தாண்டிப் போவுது. இந்த ரகம் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும். என்னைப் பாரேன். இந்த அம்மினிக் கழுதை எனக்கு அஞ்சாவதோ ஆறாவதோ...”

“ராகவன் பிள்ளை! குளிச்சா தேவலாம் போலிருக்கு. “கௌதமன் கொளத்திலே இப்பல்லாம் கால்வைக்க முடியாது தெரியுமா?, சாமி. குடிதண்ணிக்காவ மட்டும்தான். அம்மினி, ஐயருக்கு ஒரு பக்கெட் தண்ணி கொண்டா.”

குளித்த பிறகும் உடம்பு எரிச்சல் அடங்கவில்லை. டீக்கடையைவிட்டு ரயிலடிப் பக்கமாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் யாராவது விசாரித்துவிடப் போகிறார்களோ என்று பயந்தான். வயிற்றை லேசாக புரட்ட ஆரம்பித்தது? இன்னும் இரண்டொருவர் இவனை உற்றுப் பார்த்துவிட்டு கேள்விக்குறிகளோடு தாண்டிப் போனார்கள். வேகவேகமாக நடக்க ஆரம்பித்தான்.

திடீரென்று வயிற்றின் சங்கடம் அதிகமானது. பலவிதமான ஓசைகள் வயிற்றுக்குள்ளிருந்து கிளம்பின. சற்று நேரத்திற்கு முன் குடித்த டீயின் வேலையோ இது. மனதின் சங்கடமும், வயிற்றின் சங்கடமும் ஒரே சேர வதைக்க இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கிடுகிடுவென்று வரப்போரமாகப் போய் வேஷ்டியை வழித்துக் கொண்டு உட்கார்ந்தான்.

வயிற்றின் சங்கடம். இறங்கியபிறகு எழுந்து சற்றுமுற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை. வேஷ்டியை ஒதுக்கிக் கொண்டு குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.