பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

சோலை சுந்தரபெருமாள்


அவிழ்த்தார் என்றால் தோளில் போட மாட்டார். ஊர்லெ பெரிய மனிதர்களைப் பார்த்து விட்டால் முண்டாசுப் துப்பட்டியை கம்கட்டில் வைத்துக் கொள்வார்.

ஊரில் யாரு செத்தாலுஞ் சரி பிணத்தை செவந்தான் தான் சுடவேண்டும். சுடுகாட்டில் செவந்தானின் செல்வாக்கே தனி. கிட்டதட்ட எண்பது வயதாகிறது செவந்தானுக்கு. இன்னமும் தடியூன்றாமல் நடக்கிறாரென்றால் அந்த காலத்தில் குடிச்ச கேப்பக் கூழும், உப்புக் கண்டம் போட்ட மாட்டுக் கறியுந்தான் என்று பெருமையாகச் சொல்வார். சுடு கூழுக்கும் மாட்டுக் கறி குழம்புக்கும் அப்படி இருக்கும். அப்பவெல்லாம் அரைக்கருவாய்க்கு பொடைக்கஞ்சட்டி நெறைய கிடைக்கும். இப்பதான் எல்லாருஞ் சாப்புடப் போய் நமக்கு கெடைக்காமப் போச்சு...” என்று சலித்துக் கொள்வார். அதே மாதிரி நண்டு, நத்தை எல்லாம் நொறுங்கச் சாப்பிட்டவர். உலுவை மீன் இவருக்கு ரொம்பப் பிரியம். அப்படியெல்லாம் சாப்பிட்டதாலெ தான் இளந்தாரிகளுடன் நின்று வேலை செய்கிறார். அதுமாதிரி பொட்டிக் கணக்கிலே கள்ளும் குடிப்பார். இப்பல்லாம் எரிசாராயந்தான்.

“நெய்வேலிக்காரன்ங்க முன்னே மாதிரி இல்ல நெறைபுடிச்சி அடிக்கிறான்ங்கய்யா...” என்று பெருமைப்படும் அளவுக்கு தப்பு அடித்தனர். இளைஞர்கள் அடிக்குத் தகுந்தபடி ஆடினர். ஆடியவர்கள் அத்தனை பேரும் நல்ல தண்ணியில் இருந்தனர். சின்னப் பசங்களெல்லாம் பாடையில் கிடந்த மாலைகளை அறுத்து பந்துகளாகச் சுருட்டி பாடைக்கு மேலே வீசி மகிழ்ந்தனர். சின்னான் மகன் ரெங்கசாமி வானவெடியை சர்வசாதாரணமாக கொளுத்தி வீசிக் கொண்டு வந்தான்.

பிணப்பாடை நெருங்க நெருங்க செவந்தான் பரபரத்தார் மரம், விராட்டி, உடைந்த ஓடு, சீனி, குங்கிலியம், சீயக்காய்த்தூள் இவைகளை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார். பொன்னுசாமியிடம் அரிவாளை எடுத்துத் தயாராக வைத்துக் கொள்ளச் சொன்னார், பாடையை கீழே வைத்து பிணத்தை வெளியில் எடுத்தவுடன் பாடையை மூன்று கொத்து கொத்தி தூக்கிப் போட்டு விடு என்று அறிவுறுத்தினார். ரெங்கசாமி வேகமாக முன்னே ஓடி வந்து ஒரே ஒரு வானத்தை மட்டும் தயாரா வைத்திருந்தான். சுடுகாட்டுக்குள் பாடை வந்துவிட்டது. ரெங்கசாமி ஒற்றை வெடியை கொளுத்தி வீசுவதற்கும் பாடையை கீழே வைப்பதற்கும் சரியாக இருந்தது.

“சாமியலே... இத்தோட ஒங்க வேலை முடிஞ்சிருச்சி. இனிமே பொணம் எங்களுது. சொந்த பந்தமெல்லாம் முடிஞ்சு போச்சு. வெலவுங்க.... இருட்டறதுக்கு மின்னாடி... எங்க வேலையப் பாக்கணும்...” செவந்தானின் குரல் உயர்ந்தது.