பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

சோலை சுந்தரபெருமாள்


நேரத்திலேன்னு- நின்னோம். தண்ணி போட்டிருந்திருப்பாரு போலிருக்கு. கிட்டே வந்து என்னடா இன்னேரத்திலே யார்டா நீள்னாரு. நான் முத்தன் மகன் பொன்னுச்சாமின்னேன். அவென் யார்டான்னாரு ஒத்தவீட்டு மூக்கன். நொண்டிக்கிழவன் மகன் கள்ளவீட்டு அய்யா ன்னு சொன்னேன். எங்கெடா போயிட்டு வாறியன்னாரு. சினிமாவுக்குன்னு சொன்னேன். சரி என்னோட கொஞ்சம் வாங்கடா. கொளத்து வய வரைக்கும் போயிட்டு வருவோம்ன்னாரு... எனக்கு என்னடா நல்லா மாட்டிக்கிட்டமே... இபோகாட்டி மனசிலே வச்சிக்கிட்டு அடிப்பாரேன்னு மொட்டையா- எதுக்கு வயலுக்கு மம்பட்டி எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொன்னேன். நின்னுங்கடா. வர்றேன்னு போனாரு. போயி கொஞ்ச நேரத்திலே- பொரப் போட்டாரு ச்செய்- இது வம்புலெ வந்து முடியப் போவுதுன்னு ஒரே தட்டு, ஓடி வந்திட்டோம் அன்னக்கி மைக்கா நாளுதாய்யா. இவருக்கும் மொத்திக் கள்ளன் மகனுக்கும் சண்டெவக்காலொக்க வயதான ஆளா இருந்தாலும் இவரெ ஒன்னும் பண்ண முடியலைய்யா..." பொன்னுச்சாமி சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு... ஊறி வந்த வெத்திலை எச்சியை காரித் துப்பினார் செவந்தான்.

கால்மாட்டில் எரிந்து கொண்டிருந்த விறகு ஒன்று சரிந்து விழுந்தது. சுற்றிலும் திபுதிபுவென எரிய ஆரம்பித்தது. காற்று கொஞ்சம் தணிந்து விசியது. சாராயம் வாங்கப் போனவனின் பாட்டுக் குரல் தூரத்தில் கேட்டது. செவந்தானுக்கு பொன்னுச்சாமி கூறியவுடன் பழைய நினைவு வந்தது. புகையிலையை உள்ளங்கையில் வைத்து கசக்கி கடைவாயில் அடக்கிக் கொண்டார். கணன்று வந்த காரை எச்சியை துப்பிவிட்டு கணைத்துக் கொண்டார். போதை தணிந்திருந்தது. மீண்டும் கணைத்துக் கொண்டு-

"நீ...இதெச் சொல்றே- நான் ஒரு தரம் இவருகிட்டே மாட்டிக்கிட்டேன்டா... மாட்டிக்கிட்டேன்னா... ஒன்னுமில்லே... அப்ப கள்ளுக்கடை இருந்த நேரம்... நானும்... எம் மச்சான்... அதான் எஞ்சம்மந்தியும் கள்ளுக் குடிக்கப் போனோம். எனக்கும் எம் மச்சானுக்கும் சின்ன தவசல். சரியாப் பேசிக்கிறதில்லே. ஒரு நாப் பொங்கலுக்கு வருசெ கொண்டுக்கிட்டு வந்திட்டாரு. எம்மருமவ அஞ்சி ரூவாக் காசெக் குடுத்து போயித்து வாங்கன்னுச்சி. சரின்னு அந்தாளெ அழைச்சிக்கிட்டு போனேன். அங்கே ஒரே கூட்டம் பொங்கச் சமயமா- கூட்டம். ஒரு மங்கு வாங்கி ஆளுக்கு பாதி குடிச்சோம். அப்பதான் இவரு வந்தாரு. மொதல்லேயே குடிச்சிருந்திருக்காரு. “டேய் செவந்தான் எனகொரு. கொவளை வாங்கியாடான்னாரு.” 'நமக்கென்ன சொன்னதெக் கேப்போம்'ன்னு வாங்கிக் கொடுத்தேன்.