பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

349


வரைவதிலேற்பட்ட வலியை எதிர்கொள்ள இயலாமல் அடிக்கொருதரம் அவன் தலை குலுங்கியது.

தலையைத் தடவி விட்டுக் கொண்டே சகபயணிகளை வேடிக்கை பார்த்தவாறிருந்தான். கண்டக்டர் நெரிசலில் புகுந்து பிரயத்தனப்பட்டு வெளிவருகையில் விபத்தில் இறந்தவனின் ஒரு அம்சம் அவர்மீது சுவாசமிடுவதை எச்சரிக்கையாக கவனித்தான். இந்த பஸ் எதுவரையில் செல்லுமென்று விசாரித்து கடைசி நிறுத்தத்திற்கு டிக்கெட் வாங்கினான். கம்பியைப் பிடித்திருந்த கையில் இறகு வருடுவது போலிருந்த கிளர்ச்சியனுபவத்திற்கு கூசியது உடல். அந்த சுகம் அறுந்துவிடாத ஜக்கிரதையோடு தலையுயர்த்திப் பார்த்தான். உள்ளங்கையிலிருந்து ஒழுகி முழங்கை வரையிலான நெளிக்கோடுகளின் முடிவில் சொட்டுகளாய் ரத்தம் துளிர்த்திருந்தது. நெஞ்சையடைத்து திணறியது சுவாசம். கையை உதறி அழுத்தமாய் சட்டையில் துடைத்துக் கொண்டான். பிசுபிசுப்பு அகன்றபாடில்லை. மீண்டும் மீண்டும் பரபரப்பாய் கையைத் தேய்த்து அதை முற்றுமாய்க் களைத்துவிட முனைந்தான். அவன் கையில் டிக்கெட்டைத் திணித்துவிட்டு விநோதமாய் உற்றுப்பார்த்த கண்டக்டர், அப்பால் நகர்ந்தபோது-அவர், நசித்துப் போன மனித மூளையின் ஒரு துண்டை உதிரக்கறைகளுடன் தன்கையில் திணித்ததை நம்பத் திராணியற்று அங்குமிங்குமாய் நடுக்கத்துடன் தேடினான். அந்தப் பஸ்லிருந்து உடனடியாக தப்பிச் செல்வதாயிருந்தது அவனது முயற்சி பெருத்த அசைவுடன் பஸ் நின்றது.