பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வண்ணார வீரம்மாள்

சித்தூர் சமஸ்தானத்தில் புளியந்தோப்பு என்று ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் புளிய மரங்கள் மிகவும் அதிகம். அதனாலேதான் ஊருக்கு புளியந்தோப்பு என்று பெயர் வந்தது. புளியந்தோப்பு, கிராமமானதால், வீடுகள் அதிகமில்லை. அந்தணர்களின் வீடுகள் சில. அவர்கள் தனித்தெருவில் வசித்து வந்தார்கள். வியாபாரிகள் சிலர். அவர்களுக்குப் பெருத்த வியாபாரம் கிடையாது. குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உப்பு, மிளகாய் முதலியன அவர்கள் விற்று வந்தார்கள். அதிகமான ரூபாய் நாணயங்கள், அவர்களுக்குத் தினசரி வியாபாரத்தின் மூலமாய்க் கிட்டுவதில்லை. செப்புக் காசு வாணிபம் தான் அதிகம். பயிர்த் தொழிலில் ஈடுபட்டு குடியானவர்கள் வசித்தார்கள். இவர்களின் தொகைதான் பெரும்பான்மை. இந்தப் பண்டை காலத்து கிராமத்தில் ஒரு நாவிதன், ஒரு தச்சன், ஒரு கொல்லன், ஒரு வண்ணான், ஒரு ஜோசியன், ஒரு (தங்க) ஆசாரி - முதலியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஊரின் ஒரு கோடியில் உழைத்தும், வயிறாற உண்ண கூலி கிடைக்காத தீண்டாதார்கள் குடியிருந்து, எவ்வாறோ காலங்கழித்து வந்தார்கள்.

புளியந்தோப்பு விஸ்தாரமான கிராமம் இல்லை. ஊரில் குடியிருக்கும் மனிதர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்நூற்றுக்கு அதிகப்படாது. நஞ்சை, புஞ்சை வகையறா யாவும் இருநூறு ஏகரா நிலமிருக்கும். அதாவது புளியந்தோப்பு ஆள் ஒவ்வொருவருக்கும் அரை ஏகரா நிலம் கூட பங்கு வராது. ஆனால் பூமி இப்படிப் பங்கிடப்பட்டது என்று நினைக்க வேண்டாம். புளியந்தோப்பில், சொந்த பூமியுள்ள குடும்பங்கள் இருபது இருக்கலாம். பாக்கி சுமார் அறுபது குடும்பங்களுக்கு நிலம் இல்லை. குடியிருக்கும் வீடுகள் கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. பூமி சம்மந்தப்பட்ட வரையிலும், மேற் கூறியவாறு பங்கு ஏற்பட்டிருந்தாலும், பொதுவாக மனக்குறையும், பொறாமையுமில்லாமல், புளியந்தோப்பார்