பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சோலை சுந்தரபெருமாள்


பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலை அவனுக்குக் கிடைத்தது. கலாபுரத்துக்கும், புளியந்தோப்புக்கும் சுமார் நூறு மைல் இருக்கும். வண்டிப்பாதை சரியாக இருக்காது.

கமலாபுரம் புளியந்தோப்பைக் காட்டிலும் பெரிய ஊர். அந்த ஊரில் சுமார் முன்னூறு வீடுகளுக்கு அதிகமிருக்கும். தங்கள் ஊர் வளர்கிற ஊர் என்று கமலாபுரத்தார் சொல்லிக் கொள்ளுவார்கள். “அஷ்டமத்திலே சனி உட்கார்ந்து அனர்த்தங்களுக்குள்ளாகித் தேய்ந்து போகிற ஊர் போகட்டும். நம்ம ஊருக்குக் குருவின் ஒன்பதாம் மடத்து வீட்சிண்யம் (பார்வை) பூராவாக இருக்கிறது. அது வளர்ந்து கொண்டே போகும். அதற்கு ஒரு நாளும் அழிவு கிடையாது” என்று கமலாபுரத்து குட்டைச்சுவடி ஜோசியர் சொல்லுவார். அவர் சொல்லுவதற்கு ஏற்றாற்போல, ஊரில் பள்ளிக்கூடம் ஏற்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்துக்குத்தான் நாராயணன் உபாத்தியாயராக வந்திருக்கிறான். முன்னிருந்த “அம்மை மூஞ்சி” வாத்தி இறந்து போகவே, பள்ளிக்குப் பின்னர், “பவுண்டு” (பட்டிமேச்சல் மேயும் கால்நடைகளை அடைத்து அபராதம் வாங்கும் இடம்) வந்தது. அதற்குப் பின்னர் பஞ்சாயத்து ஏற்பட்டது. பிறகு சிறு கோயில் தோன்ற, அதற்குத் திருவிழாவும் அமைக்கப் பெற்றது. மேலும் கமலாபுரம் நீலா நதிக்கரையில் உள்ளதாகையால், அதன் வெள்ளம் கமலாபுரத்தை வளம்பெறச் செய்து வந்தது.

பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நாராயணன் கமலாபுரத்துக்குக் கால்நடையிலே (நூறு மைலும்) வந்து சேர்ந்தான். வழியிலே எங்கே படுத்துறங்கினான், என்ன உண்டான் என்பது தெரியாது. கமலாபுரத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. ஒரு கனவானுடைய சிபாரிசு கடிதத்தின் மூலமாக.

அப்பொழுது நாராயணனுக்குப் பதினெட்டு வயது. “சொட்டவாளைக் குட்டி” மாதிரியிருப்பான். அவன் இடுப்பு குறுகி, மார்பு விரிந்திருக்கும். நல்ல அழகிய தோற்றமுள்ளவன். மாநிறத்தான். பதினெட்டு அடிக்கு மேல் பாய்ந்து தாண்டுவான். திவ்யமான தொண்டை, குழந்தைகளை அரவணைத்து அழைத்து வைத்து, தித்திக்கும்படி அவர்களுக்குச் சிறுகதைகள் சொல்லுவான். ஓட்டம் பிடித்தால் மூன்று மைல் வரையில் மூச்சுத் திணறாமல் ஓடுவான். புளியந்தோப்பில் ஆறாவது ஆழமான குளமாவது இல்லாமையால் அவனுக்கு நீந்தத் தெரியாது. அந்தக் குறையையும், கமலாபுரத்து நீலாநதியைக் கண்டபின்னர் தீர்த்துக் கொள்ளலாம் என்று சந்தோஷமடைந்தான்.

கால்நடையாக வழிப் பிரயாணம் செய்து களைத்துப் போன நிலைமையில், நாராயணன் பள்ளி நிர்வாகிப் பெரியார் முன்னிலையில் போய் நின்றான்.