பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

41


“உட்காரு, அப்பா! யார் நீ" என்றார் பெரியார்.

“தங்கள் ஊர்ப் பள்ளிக்குத் தாங்கள் உபாத்தியாயராக நியமித்த நாராயணன்” என்றான்.

“வாத்தியாரே! வாரும் நல்ல வேளை! பழைய வாத்தியார் இறந்த ஒரு மாத காலமாக, இந்த ஊர்ப் பையன்கள் கழுதை மேய்க்கிறார்கள். நீர் வந்திருக்கும் லக்கினம் முகூர்த்தத்துக்கு எடுத்ததாகும். சுகஸ்ய சிக்கிரம் என்பது சுலோகம். ஆளைவிட்டுப் பள்ளிக்கூடத்தைக் காண்பிக்கச் சொல்லுகிறேன். அங்கே போயிரும். பையன்களை அழைத்து வருவார்கள். லக்கினம் தவறிப் போகாமல், பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து விடும்” என்றார்.

“சரி” என்றான் நாராயணன்.

ஆள் முன் செல்ல, நாராயணன் பின் நடந்தான். “கமலாபுரத்தில் எல்லோரும் இந்தப் பெரியவரைப் போலத்தான் இருப்பார்களோ? சாப்பிட்டாயா என்று மரியாதைக்குக்கூட அவர் கேட்க மறுத்துவிட்டாரே! வாத்தியார் வந்த சந்தோஷத்திலேயே, அவர் அதை மறந்து விட்டாரோ? என்னமோ, போகப் போகத் தெரிகிறது. பார்த்துக் கொள்வோம். வந்த முதல் நாளே வருந்துதல் கூடாது” என்று எண்ணிக் கொண்டே போனான் நாராயணன்.

“எந்த ஊர்” என்று வழியிலே ஒருவர் கேட்டார்.

“இந்த ஊருக்குப் புதிதாய் வந்திருக்கும் வாத்தியார் நான்” என்றான் நாராயணன்.

“சரிதான்” என்று அவர் போனார்.

நல்ல கமலாபுரம் என்று நினைத்தான் நாராயணன்.

“யார் ஐயா அங்கே போகிறது” என்று பின்னிருந்து ஒரு குரல் வந்தது.

“அயலூர்” என்றான் நாராயணன்.

“இந்த ஊர் இல்லை என்று எனக்குத் தெரியும். அதை நீர் சொல்ல வேண்டுமா? காலமே கெட்டு வருகின்றது. உம்மை நான் கேள்வி கேட்டது பிசகு, நீர் யாராயிருந்தால் எனக்கென்ன” என்று சொல்லிக்கொண்டே அவர் போனார்.

“வாத்தியார் வேலை இந்த ஊரில் அழகாயிருக்கும் போலிருக்கிறதே” என்று எண்ணிக்கொண்டே போகையில், “களைப்பாய்ப் போகிறீர்களே? சாப்பிடவில்லை போலிருக்கிறது. இந்தாருங்கள்; இந்தப் பழங்களைச் சாப்பிடுங்கள்” என்று ஒரு சிறு பெண் சொன்னாள். வாய் பேசாமல், நாராயணன் அவைகளை வாங்கிக் கொண்டான்.

“நான் இந்த ஊர் பள்ளிக்கூடத்தின் புது வாத்தியார். அங்கே நீ வருவாயானால், உன் பழங்களுக்குக் காசு கொடுக்கிறேன்” என்றான் நாராயணன்.