பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

43


இந்தப் பள்ளியின் அடுத்த பக்கத்தில் சமைத்துக் கொள்ள இடமிருக்கிறது” என்று சொல்லிவிட்டு நிர்வாகிப் பெரியார் அகன்றுவிட்டார்.

பள்ளிக்கூட வீட்டைச் சுற்றிப் பார்த்தான் நாராயணன். பக்கத்தில் ஒரு அறையிருந்தது. அதற்கும், வெளி வீதிக்கும் தனி வழியிருந்தது. அடுப்புக்கட்டிகள் இரண்டு இருந்தன. உடைந்ததும், உடையாததுமாக நாலைந்து மண்பாண்டங்கள் இருந்தன. பள்ளி ஊர்க்கோடியில் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். பள்ளிக்கூட கட்டிடத்துக்குப் பக்கத்தில் நடைபாதையின் ஒதுக்குப்புறத்தில் ஒரு கிணற்றைக் கண்டான். அந்தக் கிணறு ஊர் தண்ணிர்ப் பந்தலுக்காக ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிந்து கொண்டான்.

பள்ளிக்கும் நீலாநதிக்கும் இரண்டு பர்லாங்கு தூரம் இருக்கும். தண்ணீர் பந்தல் வாளியை எடுத்து, கிணற்றினின்றும் தண்ணீர் இறைத்து, தனது உடம்பைக் கழுவி சுத்தம் செய்து கொண்டான். பிறகு கையில் வைத்திருந்த பழங்களைத் தின்று ஏப்பமும் விட்டான். ஆனால் பள்ளியில் குவிந்து கிடந்த குப்பை மட்டும் அவன் கண்ணை உறுத்திற்று.

தண்ணீர்ப்பந்தல் துடைப்பத்தைக் கடன் வாங்கிக்கொண்டு பள்ளியில் நுழைந்தான். இதற்குள் அரிசி, பருப்பு, கொஞ்சம் எண்ணெய், மிளகாய், சிறிது மோர், சிறிது நெய்-இத்தனையும் வந்து சேர்ந்தன. ஆனால் எதைக்கொண்டு அவைகளைச் சமைப்பது? விறகு இல்லை; பாத்திரங்கள் கிடையாது. கையால் தொட்டதும் பதார்த்தங்களைப் பக்குவமாய்ச் சமைத்து விடும் சக்தி நளனுக்கு இருந்ததைப்போல, நாராயணனுக்கு இல்லை. சாமான்கள் கொண்டு வந்தவர்கள் அவைகளைச் சாண் குப்பையிலே வைத்துவிட்டு, கூடையைப் பின்னால் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டுச் சென்றார்கள்.

பழம் சாப்பிடுவதற்கு முன், களைப்பையறியாத நாராயணனுக்குப் பசியால் இப்பொழுது காது அடைத்தது. தனது குடும்பத்தாரை நினைத்து, தனது தரித்திரத்தை நினைத்து, தனது தற்போதைய கமலாபுரத்து நிலைமையை நினைத்து, “கோ” வென்று அழுதான் நாராயண சர்மா. அப்பொழுது பிற்பகல் இருபது நாழிகையிருக்கும். கோடைகாலம் களைப்பும், கண்ணீரும் சேர்ந்தவுடன், அவனையறியாமல் அவன் குப்பையிலேயே படுத்துக்கொண்டு. தூங்கிவிட்டான். எவ்வளவு காலம் அவன் இப்படித் துங்கினான் என்பது அவனுக்குத் தெரியாது; கண்விழித்துப் பார்த்தான். பள்ளிக்கூடத்து வாயிற்படியண்டை சிறிய பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்ததைக் கண்டான். தனக்குப் பழம் கொடுத்த பெண் என அவனுக்குத் தெரிந்தது.

“சுவாமி! நெடுநேரம் தூங்கிப் போனீர்களே! பொழுது