பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சோலை சுந்தரபெருமாள்


போக இன்னும் இரண்டு நாழிகைதானே இருக்கிறது? நான் இங்கே வந்தேன். எல்லாம் திறந்திருந்தது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். கூடைச் சாமான்கள், பள்ளிக்கூடச் சாமான்களைப் பார்த்துக் கொண்டு இங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன். பொழுது போயிற்றே, எழுப்பலாமா என்று நினைத்தேன். அசதி என்று சும்மாயிருந்து விட்டேன். நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்தீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

நாராயண சர்மாவுக்கு என்ன சொல்லுவது என்று ஒன்றுமே தெரியவில்லை. அந்தப் பெண்ணில் செயலைக் கண்டு, அவன் மனம் குழம்பிப் போனான்.

“எங்கள் வீட்டில் மோர் இருக்கிறது; கொண்டு வரட்டுமா” என்றாள். -

“நீ யார்” என்றான்.

“என் பெயர் வீரம்மாள். நான் வண்ணார வீடு” என்றாள்.

“வீரம்மா! நீ சொன்னதற்கு ரொம்ப சந்தோஷம். ஆபத்துக்காலத்தில், அந்தணர்கள் வேறு ஜாதியாரிடமிருந்து உப்புப் போடாத மோர் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிறது. நீ கொடுக்கும் எதையும் தட்ட எனக்கு இஷ்டமில்லை. ஆண்டவன் உன்னைக் காப்பாற்றவேண்டும்” என்றான் சர்மா.

“சுவாமி! ஆண்டவனைக் கூப்பிடாதேயுங்கள். எங்கள் வீட்டில் நாங்கள் பத்துக் குழந்தைகள் பிறந்தோம். பாவி நான் ஒண்டிதான் பாக்கி. அந்த ஆண்டவனுக்கு எங்கள் குடும்பத்திலே இரக்கம் கிடையாது. ஊரைச் சுற்றி வரும் போதெல்லாம் அவனுக்குக் கண் இருக்கிறது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலே, அவன் கண் அடைத்துப் போகிறது. எங்கள் அம்மா, அப்பா அழுகிறது.

'ஆண்டவனுக்குத் தெரிந்தால், அவன் கம்மாயிருப்பானா?' நீங்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டால், அது சாத்தியப்படாது. இப்பொழுது நீங்கள் ஆகாரத்திற்கு என்ன வழி செய்யப் போகிறீர்கள்” என்றாள் வீரம்மாள்.

“அதுதான் தெரியவில்லை. பாத்திரங்கள் இல்லை; விறகு இல்லை. வீடு புழுதிமயமாய் இருக்கிறது. கடைசியாக, எனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் பசியோ காதடைக்கிறது. எங்கள் ஊரிலிருந்து இங்கு வந்து சேர, நூறு மைல் நடந்து வந்து சேர்ந்தேன். வழியிலே சரியாக சாப்பாடு கிடையாது” என்றான். சொல்லச் சொல்ல, அவன் கண்களில் நீர் பெருகிற்று.

“ஒன்று சொல்லுகிறேன். வருத்தப்படாமலிருந்தால் சொல்லுகிறேன். என்னிடம் நீங்கள் கோபங் கொள்ளலாகாது. எங்கள் வீட்டிலிருந்து விறகும் சிறு வெங்கலப்பானையும் கொண்டு வந்து, நான் சோறு சமைத்து விடுகிறேன். இன்றைக்கு மோரை