பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சோலை சுந்தரபெருமாள்


வேண்டிய மண்பாத்திரங்களைச் சர்மா வாங்கிக்கொண்டான். வீரம்மாளின் உதவியால் குழம்பு வைத்தான். குழம்பிலே என்னன்ன சாமான்களோ போட்டுப் பார்த்தான். அதிலே ருசி மட்டும் இல்லை. பழகினால் எல்லாம் தானாக வந்துவிடும் என்று எண்ணிக் கொண்டான். தினந்தோறும் வீரம்மாள் பள்ளிக்கு வந்து, அதைக்கூட்டி மெழுகி சுத்தம் செய்வாள். கூலிவேலையன்றல்லவா? எனவே, அதைக் குறைகூற, யாரால் முடியும்? ஆனால் சமையல் பாண்டங்களைச் சுத்தம்செய்ய, சர்மா அவளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. ஏன் என்று அவள் கேட்டாள், ஜாதி என்று சொல்லி விழிப்பான்.

பள்ளிக்கூடத்தில் சுமார் இருபத்தைந்து பையன்களும், ஒரு சிறுபெண்ணும் படித்து வந்தார்கள். ஏன் ஒரு பெண் மட்டும் என்று கேட்கலாம். அந்த ஒரு பெண் வந்ததுகூட ரொம்ப நிர்ப்பந்தத்தினாலே, அந்தப் பெண்ணின் தகப்பனாருக்குத் தன் பெண் படிக்கவேண்டும் என்ற ஆவல் அதிகமாயிருந்ததால், அவர் மட்டும் தனது குழந்தையை அனுப்பி வைத்தார். ஊராருக்கு இது பிடிக்காத சங்கதியாகும்; என்றாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். அந்தத் தனி மனிதனுடைய பிடிவாதத்தையும், பணத்தையும் கருதி.

சர்மாவின் சம்பளம் என்ன? மாதம் ஐந்து ரூபாயும் அமாவாசை நாளன்றைக்கு பையனுக்குக் கால் மரைக்கால் வீதம் அரிசியும். ஊரார் எவரும் விரும்பாத் மரக்கட்டை, சர்மாவுக்கு, விறகாக அனுப்பப்பெறும். புதுப்பிள்ளை வந்து சேர்ந்தால் ஒரு தேங்காய், பாக்கு வெற்றிலை, ஒரு அனா குருபாத காணிக்கை நாராயண சர்மாவுக்கு வரும். இருபத்தைந்து குழந்தைகளும் ஒரே வகுப்பல்ல. அட்சராப்பியாசம் முதல் கூட்டிப் படிக்கத் தெரிந்த பையன்கள் வரையில் இருந்தார்கள். இவர்களைக் கட்டிமேய்க்கும் கஷ்டம் பள்ளி வாத்திமார்கள் அறிவார்களேயொழிய, பெற்றோர்களுக்கு ஒரு நாளும் தெரியப்போவதில்லை. வீட்டிலே குறும்பு செய்வதால், பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு என்று கம்பீரமாகத் தகப்பன் சொல்லிவிடுவான்; ஆனால் பள்ளி வாத்தியின் கஷ்டத்தை அவன் அறிவானா? “என் பையனுக்குச் சரியாய்ப் படிப்பு வரவில்லை. வாத்தியாரின் கவனிப்புப் போதாது” என்று குறைகூற மட்டும் அவனுக்குத் தெரியும்.

ஆனால், பச்சைக்குழந்தைகளைக் கண்ணாறக்கண்ட பிறகு, நாராயண சர்மா தனது கஷ்டமொன்றையும் நினைத்துக் கொண்டதேயில்லை. சமையல் நேரத்தைக் கூட மறந்துவிடுவான். குழந்தைகளைத் தெய்வங்களாக அவன் கொண்டாடினான். நாராயண சர்மாவின் அதிருஷ்டத்தால், அவன் கமலாபுரத்துக்கு வந்த இரண்டொரு தினங்களுக்குள்