பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

47


அமாவாசையும் வந்தது. அந்த மாதச் சாப்பாட்டு அரிசியும் கூட வந்து சேர்ந்தது. மாதம் முடிந்தபின், சம்பளமும் கைக்கு எட்டிற்று. ரொக்க ரூபாய் ஐந்து ரூபாயைக் கையில் பார்த்தவுடன், அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஐந்து மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள தபாலாபீசுக்கு ஓடி, நான்கு ரூபாயைத் தனது தகப்பனார் பெயருக்கு மணியார்டர் செய்தான். அன்று முழுவதும் அவன் அடைந்த களிப்பைச் சொல்ல முடியாது.

ஆறு வடியக்கொல்லும், பஞ்சம் தெளியக்கொல்லும் என்று உலகத்தார் சொல்லுவார்கள். அதுபோல, சோமதேவ சாஸ்திரிகள் நாராயணன் அனுப்பிய பணத்தைக் கையிலெடுத்து கனம்பார்த்து களிப்படையுங் காலத்தில், இரண்டு தடவை சொடுக்கி இழுத்து இறந்துபோனார். நாராயண சர்மாவுக்குக் கடிதமூலமாக சேதிகிடைத்தது. விம்மி விம்மி அழுதான். வீரம்மாளிடம் சொன்னான். ஊராரின் உத்தரவைப் பெற்று, தனது தகப்பனாரின் உத்தரக்கிரியைகளின் பொருட்டு புளியந்தோப்புக்குச் சென்றான். ஏழைக் குடும்பத்தின் மூலபுருஷன் இறந்துபோனால், அந்த விபரீத நிகழ்ச்சியின் பலனை யாரால் எழுத்தில் எழுதமுடியும்? வாயால் சொல்ல முடியும்?

சொல்லுவதென்ன? சோமதேவ சாஸ்திரிகளின் உத்தரக் கிரியைகள் நடைபெற்றன. குடும்பத்துக்கு ஐம்பது ரூபாய் கடன் ஏற்பட்டது. கடன் பொறுப்பை நாராயணன் ஏற்றுக்கொண்டு, கமலாபுரத்துக்குத் திரும்பி வ்ந்தான். வந்ததும் வீரம்மாள் அவனை விசாரித்தாள்.

“இரண்டு வித நஷ்டங்கள் எனக்கு உண்டாகி விட்டன. தகப்பனாரைச் சுகத்தில் வைத்துக் களிக்க வேண்டுமென எண்ணின எனக்கு அவர் இறந்தது ஒரு நஷ்டம். எனக்குச் சந்தோஷம் எது? அவருக்குப் பணிவிடை செய்து பாதுகாக்க அவர் இல்லையே! அவர் இறந்ததனால் எனக்குக் கடன் ஏற்பட்டது. மற்றொரு நஷ்டம்” என்றான்.

“கவலைப்பட்டுச் செய்வதென்ன? கடனைத் தீர்க்கிற வழியைப் பற்றியல்லவா இனிமேல் யோசிக்க வேண்டும்? கடனைத் தீர்த்து நல்ல பெயரோடு வெளியே வரவேண்டும்; அதுதான் கவலை” என்றாள் வீரம்மாள்.

“உன் யோசனையை மெச்சினேன்” என்றான் நாராயண சர்மா.

அந்த மாதம் முதல் தன் தாய்க்கு மூன்று ரூபாயும் கடனுக்கு இரண்டு ரூபாயும் அனுப்பி வந்தான். அமாவாசை அரிசி அவன் சாப்பாட்டுக்குப் பாத காணிக்கை பணம் மணியார்டர் கூலிக்கு. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஆனால் கடன் தீர்ந்தபாடில்லை. இன்னும் இருபது ரூபாய்க்கு அதிகம், பாக்கி என்று கடன் கொடுத்தவன் சர்மாவுக்கு எழுதிவிட்டான்.