பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

மிழ்நாட்டின் இசை, நாட்டியம், சிற்பக்கலை, ஆன்மீகம் முதலிய பல துறை வளத்துக்கும், வளர்ச்சிக்கும் தஞ்சை அரும்பெரும் பங்காற்றியுள்ளது. இது வரலாறும் வாழ்க்கையும் காட்டும் உண்மை.

இசை மூலம் பக்தி வளர்த்த அருட்ச்செல்வர்கள் துதித்துப் போற்றியப் பெரியகோயில்கள் பலவும் சிற்பக்கலையின் செல்வச் சிறப்புகளோடு தஞ்சை மண்ணில் அழகு செய்கின்றன. இசைக்கலை வளர்த்த மேதைகள் பலரும், நாட்டியக் கலைக்கு பெருமை சேர்த்து தங்களுக்குப் புகழ் தேடிக்கொண்ட நடனமணிகளும், அவர்களைப் பயிற்றுவித்த நாட்டிய ஆசிரியர்களும் பெரும்பாலும் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. அதேபோலத் தமிழ் இலக்கியத்துக்கு வளமும், வனப்பும், புதுமையும், பெருமையும் தேடித்தந்த பேனா மன்னர்கள் பலப்பலர் தஞ்சையைச் சேர்ந்தவர்களாவர்.

திரு. சோலை சுந்தரபெருமாள் எடுத்துக்காட்டியிருப்பது போல, தமிழின் முதலாவது நாவல் என்ற சிறப்பைப் பெற்றுள்ள ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எழுதிய வேதநாயகம் பிள்ளையும், தமிழின் முதலாவது துப்பறியும் நாவல் எனும் பெருமைக்குரிய ‘தானவன்’ ஆசிரியர் நடேச சாஸ்திரியாரும், முதலாவது தேசீய சீர்திருத்த நாவல் என்று கருதப்பட வேண்டிய ‘முருகன் ஓர் உழவன்’ படைத்த கா.சீ. வேங்கடரமணியும் தஞ்சை மண்ணின் மைந்தர்களேயாவர். அதைப்போல சிறுகதைக்குக் கலைத் தன்மையும் இலக்கிய கனமும் சேர்த்த படைப்பாளிகள் மிகப்பலர் தஞ்சையின் புதல்வர்களே.