பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சோலை சுந்தரபெருமாள்


செய்து கொடுக்கலாம். அவர்களுக்கு சாஸ்திரமேது? அவர்களுக்கு அவர்கள் தான் சாஸ்திரம் என்று வம்பு பேசுகிறார்கள். உலை வாயை அடைத்துவிட முடியுமா? யோசித்துப் பார். உன் தமையனுக்குக் கலியாணமாகா விட்டாலும், உனக்கு இந்த வருஷம் எப்படியாவது தன் பெண்ணைக் கொடுத்துவிட வேண்டுமென்று உன் சின்ன மாமா கணபதி சாஸ்திரி ஒரு காலில் நிற்கிறான். நீயும் ஒண்டியாய் எத்தனை நாள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியும்? இரண்டு கலியாணங்களும் இந்த வருஷம் கட்டாயம் நடந்தாக வேண்டும். இரண்டுக்குமாக, ஐந்நூறு ரூபாய் பிடிக்கும். உனக்குத் தெரிந்தவிடத்திலேயே, கமலாபுரத்தில் கடனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, எனக்கு உடனே பதில் எழுது. கலியாண காரியங்கள் சீக்கிரம் ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் உடனே பதில் எழுது. நாங்களெல்லோரும் இங்கே சௌக்கியமாய் இருக்கிறோம்.”

வீரம்மாள் கடிதத்தைப் படித்து முடித்தாள். பேசாமலிருந்தாள். அவள் முகத்தில் ஏதோ வாட்டம் ஏற்பட்டாற்போல நாராயணனுக்குத் தோன்றிற்று.

“என்ன. வீரம்மா பேசாமலிருக்கிறாயே" என்றான் நாராயணன்.

“அம்மா எழுதியிருக்கிறது சரிதானே! உங்கள் தங்கைக்குக் கல்யாணம் ஆக வேண்டும்! பிராமண வீட்டில் அதை அதிக காலம் நிறுத்தி வைக்க முடியாது. எங்கள் வீடா பிராமணர் வீடு? அம்மா சொல்லுகிறது போல, நீங்களும் எவ்வளவு காலம் ஒண்டியாயிருக்கிறது? நீங்கள் கடனைப் பற்றிக் கவலைப்படுகிறாப் போலிருக்கிறது. கடனைப் பற்றி நினைத்தால், கல்யாணம் போகிற வழி எந்த வழி?” என்று கேட்டாள் வீரம்மாள்.

ஆனால் அவளுக்கு வழக்கமாயுள்ள உற்சாகத்துடன் அவள் பேசவில்லையென்று அவளுடைய குரலினின்றும் தெரிந்ததாக நாராயணனுக்குத் தோன்றிற்று. "கடன் கவலை எனக்கு இப்பொழுது போய்விட்டது.. கடன் வாங்கிக் கடனைத் தீர்த்தவன், பின்னும் கடன் வாங்கப் பின்னடைய மாட்டான். எனக்கு இப்பொழுது வந்திருப்பது கல்யாணக் கவலை” என்றான்.

“உங்கள் தங்கைக்குக் கல்யாணம் செய்யாமல் சும்மாயிருக்க முடியுமா? நீங்களும் கலியாணம் செய்து கொள்ள வேண்டிய காலம் தான்” என்றாள் வீரம்மாள்.

“என் தங்கைக்குக், கல்யாணம் செய்துவிட வேண்டும். அதை நான் தடுத்துப் பேசவில்லை. எனக்கு எதற்குக் கல்-” என்று முடிப்பதற்குள் நிறுத்திக் கொண்டான்.

“ஏன் முடிக்கவில்லை? விழுங்கிவிட்டீர்களே” என்றாள் வீரம்மாள்.