பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

51


“ஒன்றுமில்லை" என்றான் சர்மா.

“எதையோ மறைக்கப் பார்க்கிறீர்கள்? என்னைத் தவிர உலகத்தில் உங்களுக்கு வேறு உதவி கிடையாது என்றீர்களே” என்று வீரம்மாள் கேட்டாள்.

“நான் சொல்லாததற்கு அதுதான் காரணம்” என்றான் நாராயண சர்மா. பிறகு பேச்சும் நின்றுவிட்டது. வீரம்மாளும் வீடு போய்ச் சேர்ந்தாள். அன்றிரவே சர்மாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

காலையில் வந்தாள் வீரம்மாள். சர்மா காய்ச்சலாகக் கிடப்பதைக் கண்டாள்.

“வீரம்மா! எனக்குக் காய்ச்சல், சுரம் எப்படியிருக்கிறது என்று உடம்பைத் தொட்டுப் பார்” என்றான்.

இதைக் கேட்டவுடன், வீரம்மாளின் உடம்பு தூக்கிப்போட்டது. ஒன்றும் பேசாமல், சர்மாவின் நெற்றியையும், மார்பையும் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமில்லை என்றாள்.

“வாய் கசப்பாயிருக்கிறது” என்றான் சர்மா.

வீரம்மாளுக்குப் புதியதொரு தைரியம் உண்டாயிற்று. “நிறையச் சர்க்கரை போட்டு, கஞ்சி வைக்கிறேன். குடியுங்கள், வாய்க் கசப்பு போய்விடும்” என்றாள்.

சிறிதுநேரம் பொறுத்து, “சரி” என்றான் சர்மா. சர்க்கரை உண்டா என்று கேட்டான். இல்லை எனவே, வீட்டுக்கு ஓடி, நொடிப்பொழுதில் சர்க்கரை கொணர்ந்து, கஞ்சி வைத்துக் கொடுத்தாள். குடித்தான் சர்மா. “மயக்கமாய் வருகிறது, தலையைப் பிடித்துக்கொள்” என்றான், தன் துடையில் அவன் தலையை வைத்து, அதை இரு கைகளாலும் அழுத்தி, ஆனால் வலிக்காமல் பிடித்துக் கொண்டாள் வீரம்மாள்.

“இதமாயிருக்கிறது” என்றான் சர்மா.

“அப்படியே தூங்குங்கள்” என்றாள் வீரம்மாள். தூங்கிப் போனான். சிறிது நேரத்திற்குள்ளாகவே விழித்துக்கொண்டு, “உன்னைத் தொந்தரவு செய்வது பாவம்; தலையணையில் தலைவைத்துப் படுத்துக் கொள்ளுகிறேன்” எனக்கூறி, தலையை அவள் துடையினின்றும் எடுத்துவிட்டான். அன்று பள்ளிக்கூடம் கிடையாது. இரண்டு, மூன்று நாட்களுக்குள் அவன் காய்ச்சல் குணமாய்ப் போயிற்று.

கமலாபுரம் பள்ளி, சர்க்கார் பள்ளியாக மாறி, ஒரு வருஷமாயிற்று. ஆனால் சம்பள உயர்வுமட்டும் சர்மாவுக்கு கிடையாது. திடீரென்று ஒருநாள் அவனுக்கு ஓர் உத்தரவு ஒருவர் மூலமாக வந்தது. உத்தரவு பின் வருமாறு: “கமலாபுரம் ஆரம்பப்பள்ளி உபாத்தியாயர் நாராயண சர்மாவுக்கு: நீர் இருபத்துநான்கு மணிநேரத்துக்குள் உம்முடைய வேலையை