பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சோலை சுந்தரபெருமாள்


நமது ஆபீஸ் உத்தரவை உமக்குக் கொண்டு வந்து கொடுப்பவரிடம் ஒப்புவித்துவிட்டு, தேவூருக்குச் சென்று, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொள்ளவும். ஒப்புக்கொண்ட தேதிமுதல், உமக்குப் பதினைந்து ரூபாய் சம்பளம் போடப்பட்டிருக்கிறது. உமக்கு இஷ்டமிருந்தால், அந்த ஊர்த் தபாலாபீஸ் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளலாம். அதற்குத் தனியாக ஊதியத்தைப்பற்றி அதன் மேலதிகாரிகளுக்கு எழுதிக் கொள்ளவும்...’ கல்வி இலாகா இன்ஸ்பெக்டர்.

உத்தரவு அவனுக்குக் கிடைத்த நேரம் மாலை. மறுநாள் அதிகாலையில் புறப்பட்டாலன்றி, தேவூருக்கு இரண்டு நாட்களுக்குள் போய்ச் சேர முடியாது. சுமார் அறுபது மைல் இருக்கும். வந்தவரிடம் சார்ஜ் ஒப்புவித்தான், ஊர்ப் பெரியவரிடம் சொல்லிக் கொண்டான், மறுநாள் காலையில் அருணோதயத்திற்கு முன், கமலாபுரத்தை விட்டு புறப்பட்டுப் போனான்.

வழக்கம்போல, வீரம்மாள் மறுநாள் காலையில் பள்ளிக்கு வந்தாள். வேற்று ஆள் இருப்பதைப் பார்த்தாள். “வாத்தியார் எங்கே?” என்று கேட்டாள். “நீ யார், வாத்தியார் எங்கே கேட்பதற்கு?” என்றான் அந்த ஆள்.

“அவரை எனக்குத் தெரியும்” என்றாள் வீரம்மாள்.

“அவரைப் போல என்னையும் தெரிந்து கொள். அவர் ஊரைவிட்டு ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓட்டம் எடுத்துவிட்டார்” என்று துடுக்காகச் சொன்னான் புதிய வாத்தி.

“நீங்கள் யார்?” என்று வீரம்மாள் வினவினாள். மங்கைப் பருவம் எய்திவரும் வீரம்மாளின் வயதுக் கிராமத்தை ஏற இறங்கப் பார்த்து, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “அவர் இடத்துக்கு நான் வந்திருக்கிறேன். நீ எப்பொழுதும் போலவே வந்து கொண்டிருக்கலாம்” என்று வாய் அடங்காமல் உளறினான் அவன்.

“அவரும் வாத்தியார், நீயும் வாத்தியா? சீ! போ, மடையா” என்று சொல்லிவிட்டு விர்ரென்று வீரம்மாள் வீடு போய்ச் சேர்ந்தாள்.

அன்றைய தினமே, புதிய வாத்தி ஊர்வம்பைக் கிளப்பிவிட்டான். “கேட்டீர்களா செய்தியை! அந்த அயோக்கியன் நாராயண சர்மா, இந்த ஊர் வண்ணாரக் குடியை வைப்பாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறான். அவன் போய்விடவே, அவள் இன்றைய தினம் என்னிடம் வந்து என்னைப் பிடிக்கப் பார்த்தாள். சீ நாயே என்று அவளை அடித்துத் துரத்திவிட்டேன்” என்று அபாண்டமான பொய்யைப் புனைந்து திரித்து விட்டான், "வீரம்மாள் அப்படிப்பட்டவள் இல்லை” என்று ஊரார் சொன்னார்கள். சர்மாவுக்குப் பரிந்து சிலர் பேசினார்கள்.