பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெட்டி வண்டி

இதோ இந்தப் புளியமரத்தின் கீழே, ஆரங்கள் போன மூளிக் கால்கள், விரிந்து பிளந்த மூக்கணை, கிழிந்த கூண்டு இந்த லட்சணங்களோடு சீந்துவாரற்றுக் கிடக்கிறதே, இந்த வண்டிதான் என்ன என்ன சம்பவங்களையெல்லாம் ரெத்தினசாமிக்கு நினைவூட்டுகிறது! இந்தப் பெட்டி வண்டி-ஆம், இது பெட்டி வண்டி தான்; வில் வண்டி; ‘மைனர்’ வண்டி. ‘மைனர்’ என்றால், ‘வயசாகாத குட்டி’ என்று அர்த்தம் அல்ல. குஷியான பணக்கார வாலிபர்களை ‘மைனர்’ என்பார்கள் இல்லையா? அந்த மாதிரி மைனர்களுக்குரிய ஒரு வண்டியாகத் தான் இது உருவாயிற்று; விளங்கியது ஒரு காலத்தில்.

இதைப் பார்க்கும்போது, அவள், அந்தக் கோமளமான ரூபவதி-அந்த முகம், கண்ணழகு. அந்தக் கண்மணியிலிருந்து புறப்பட்ட ஒளி நினைவு வருகிறது. வெறும் நினைவா? வேதனை! வேதனை! ஓரே வேதனை!

ஐயோ! ஏன் இந்த வண்டி இன்னமும் இங்கே கிடைக்கிறது? ஏன் அடியோடு அழியவில்லை? இதைச் செய்தவன் போய்விட்டான்; இதன் உரியவர் போய்விட்டார். அவள் போய்விட்டாள். பூமியில் படியும் களங்கமெல்லாம் மடிந்தோ, மட்கியோ, நீரில் கலந்தோ, காற்றில் பறந்தோ போய்விடுகிறது. அந்தக் களங்கத்திலே — ரத்தினசாமிக்கு நினைவு வரும் களங்கத்திலே- இந்த வண்டியும் அவனுந்தான் மிச்சம். களங்கமா? சீ! அப்படி ஒன்று உண்டா ? உண்டானால் அதற்கு நிலைப்பு உண்டா ? — ஒன்றுமே அறியாத குருட்டுத் தனத்தோடு தான் எல்லாரும் உலகத்துக்கு-பிரபஞ்சச் கழலுக்கு- வருகிறோம். எங்கிருந்துதான் வருகிறோமோ! வருகிறோம் என்றுதான் சொல்லமுடியுமா? — நீரிலே காற்றுப்புக உண்டாகும் நீர்க் குமிழியா மனிதப் பிறவி? ஒன்றுமே புரியவில்லை. புரிந்தவரோ, புரிந்ததுபோல பேசுபவரோ சொல்வதையும் நம்ப முடியவில்லை. பிரபஞ்சம் பொய்யா?