பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சோலை சுந்தரபெருமாள்


மெய்யா? பொய்யிலே களங்கம் ஒட்டாது. பொய்யே களங்கந்தானே. அதிலே களங்கம் ஒட்டாது, இரண்டறக் கலந்துவிடும். உலகம் மெய்யா? மெய்க்குக் களங்கமே இல்லை. உலகம் பொய் அல்ல, மெய் அல்ல; இரண்டும் கலந்த ஒன்று. வெளிப்படத் தெரிவதெல்லாம் பொய்; உள்ளே மறைந்திருப்பதெல்லாம் மெய்.

ரத்தினசாமிக்கு இப்டியெல்லாம் என்ன என்னவோ வேதனையும் வேதாந்தமுமான சிந்தனைகள், மூளி வண்டியைக் கண்டதும் உண்டாயின. இதன் மேலே கவிந்திருக்கும் புளிய மரங்கூடச் சாக்குச் சாக்காய்ப் பழம் உதிர்ந்த காலம் போக, இப்போது நரைத்துத் திரைத்து விறகாகத் தயாராகி மொட்டையிட்டு நிற்கிறது. இதுதான் பிரபஞ்சு விந்தை-அற்புதம்! இந்தப் புளியமரத்திலிருந்து உதிரும் பழங்களைக் காலையிலே பலநாள் புன்னகை தவழும் முகத்தோடு அவள் வந்து பொறுக்கிக் கொண்டு போவதை. அவன் பார்த்திருக்கிறான். அவன் கூடச் சில சமயம் இப்படிப் பொறுக்குவதில் அவளுக்கு உதவியிருக்கிறான். அப்போதெல்லாம் பிந்திய சம்பவங்கள் நேரும் என்று அவனுக்குத் துளிக்கூடத் தெரியாது. ஒருவேளை அவளுக்குத் தெரிந்திருக்குமோ? பிந்திய சம்பவங்களுக்கு ஏதுவான எண்ணம், எதும் அவள் உள்ளத்திலே அப்போதே எழுந்திருக்குமோ? எப்படி? ஒரு நாளும் இல்லை; சாத்தியமே இல்லை. அது நிச்சயம். தோட்டத்தில் மேயும் பசுவைத் துள்ளித் தொடர்ந்து வரும் கன்றுக்குட்டிபோல, அவளுடைய சிறு மகள் சரசுவும் அவள் சேலை முன்றானையைப் பல்லில் வைத்துக் கடித்தபடி அவளோடு கூடவே வரும் காட்சியைத் தான் மறக்க முடியுமா? அந்தப் பெண் சரசு இப்போது எங்கே எப்படி வாழ்கிறாளோ? அது தெரியவில்லை. யாரைக் கேட்டாலும், புலனாகவில்லை. அக்கம்பக்கத்தில் அன்றைக்கு இருந்த எவரையுமே, இப்போது காணவில்லை. குமார் முப்பது வருஷத்துக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வந்தால்........? முன்னே பழகிய முகம் ஒன்றைக்கூடக் காண முடியாமல் போய்விட்டது? ஹும்! இதுதான் உலகம்!

அழகான பொருள் அழியாதா, என்றுமே ஆனந்தம் தருவதால்? தெய்வப் பதுமைபோல் இருந்த அவள் ஏன் அழிந்தாள்?. சாலைக்கு அழகு தரும் ஒளி மரம் போன்ற இந்த வண்டி ஏன் இப்படிச் சிதைந்து கிடக்கிறது. பச்சைப்பசேல் என்று இலையும், பூவுங், காயுமாய் நின்ற இந்தப் புளியமரங்கூட இப்படிக் கொம்பொடிந்து தறிபட்டு வந்திருப்பதேன்? அழகு சாசுவதமா? பொய் ! பொய் ! பொய்!

இந்தப் பெட்டி வண்டியைச் செய்த ஆசாரி சோம்பேறிச் சாந்தப்பன். இந்தப் புளியமரத்தடியிலே தான் இந்த வண்டி