பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சோலை சுந்தபெருமாள்



“சோம்பேறிகளுக்காகப் பைத்தியங்கள் கற்பனை செய்வதற்குப் பெயர் கலை என்று யாராவது நையாண்டி செய்தால் கூட நாம் வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் பெருத்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவுதானே இந்தச் சோம்பேறி உலகம்!”

“இத்துடன் ‘மாயமானை’ அனுப்பியிருக்கிறேன். உங்களைச் சுற்றிப் பல வேடர்கள் திரிகிறார்கள்-இலக்கிய வேடர்கள். வேடர்கள் என்ற சொல் வேடதாரிகள் என்ற பொருளுடன் தொனிக்காதென்பது எனக்குத் தெரியும். தொனித்தால் நல்லது! அவர்களில் யாருக்காவது ‘மாயமானை’ இலக்காக்கி விடுங்கள். அச்செய்கைக்கு நன்றி! இல்லாவிட்டாலும் நன்றி! ஒரு சோம்பேறியாவது இந்தப் பைத்தியத்தைப் படித்துத் தன் இயலை அறிந்து கொண்டிருப்பான் அல்லவா?”

இவைகளைப் போன்ற பிற விசித்திரமான கருத்துக்கள் அடங்கிய அந்தக் கடிதத்தைப் படித்தேன்! இரண்டு, மூன்று முறை படித்தேன். யானைக்கு அங்குசம் போல் என் அறிவுக்குக் கடிதம் அமைந்தது. பின்னர் ‘மாயமானை’ எடுத்தேன். ஆனால் அதைப் பற்றி நான் சொல்வானேன் ? நீங்களே பார்த்துக்கொள்ளலாம்:

மாயமான்

பாழ்/வெறும்பாழ்/ இவ்வளவு பொட்டலாக என் மனம் இருந்ததே இல்லை. ஒன்றிலும் ஊக்கமில்லை; உணர்வில்லை. காலையில் எழுவதும், வெந்ததும் வேகாததுமாக எதையோ சாப்பிடுவதும், ஆபீசுக்கு ஓடுவதும், திரும்புவதும், தூங்குவதும் வாழ்வின் கொடுமையைப் பகல் தாங்குவது போதாதென்று கனவில் காண்பதும்-இதுவா வாழ்வு? இதற்கா பிறந்தோம்? வருஷம் முழுவதும் இதே கதையானால் மனத்தில் அமைதி நிலைக்குமா? தொழிலில் இன்பம் தெரியுமா? உயிரில் ஊக்கம் இருக்குமா? அந்த மாதிரியான சோர்வும், சலிப்பும் நிறைந்த நிலையில் இருந்தேன். இதற்கு மாற்று? இன்பத்தின் ஊற்றுக்கண் எனக்கு அகப்பட்டால் அல்லவா? அமைதியின் அடித்தளம் அண்டினால் அல்லவா?

யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எந்தவிதமான வேதனை உண்டானாலும் ஒரு தெய்வத்தைத்தான் சரணடைவது வழக்கம். அந்தத் தெய்வத்தைச் சரணடைந்தால் இந்தச் சலிப்பும், அயர்வும் மாறலாம் என நினைத்து ஒருவாரம் ரஜா எடுத்துக்கொண்டேன். செய்கிற தொழிலைச் செய்து கொண்டிருப்பது மட்டும் நமது