பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

71


அலுப்பிற்குக் காரணமாகாது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு போன தெரு வழியே போய்க்கொண்டு, பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு நாளைக் கடத்தவேண்டிய தலை விதி ஏற்பட்டிருப்பது மற்றொரு முக்கியக் காரணம்.

ஆகையால் சென்னைக்குக் கிளம்பினேன். நான் இருக்கும் ஊரைவிட்டு ரெயிலேறினால் செங்கற்பட்டில் இறங்கி ஏறாமல் சென்னைக்குச் செல்ல முடியாது. நான் ஜங்க்ஷனை அடைந்தபொழுது சென்னை செல்லும் ரெயில் வரவில்லை. விசாரித்ததில், வர மூன்று மணி தாமதமாகும் என்று தெரிந்தது.

என்ன செய்வது? உத்தியோகம் பார்த்துப் பழக்கம் ஆகிவிட்டதால் கீழே உட்கார மனம் வரவில்லை. அங்கே கிடந்த ஒரு பெட்டியில் மேல் உட்கார்ந்தேன். என்னுடன் பொழுதும் உட்கார்ந்துவிட்டது. உட்கார்ந்தால்தான் என்ன ? சும்மா இருக்கக்கூடாதா? பெருமூச்சு விட்டுக்கொண்டே இருந்தது. காற்றுப்பட்டால் காற்றாடி சும்மா இருக்குமா? மனத்திலுள்ள காற்றாடியின் மீது பெருமூச்சுப் படப்பட அது சுழன்று கொண்டே இருந்தது. என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்தன.

பகலுக்குப் பின் இரவும், விழிப்புக்குப் பின் தூக்கமும் வெறும் பெளதிக உலகத்து நிகழ்ச்சிகளா? அல்லது ஒவியனைப் போல் சித்திரம் ஒன்று எழுதி வேறொரு மறை பொருளைச் சுட்டிக்காட்டும் தந்திரமா? பகலென்னும் உருவெடுத்துக் காண இயற்கை முயல்கிறதா? தொழிலில் கிட்டாத அமைதி ரஜாவில் கிட்டிவிடுமா? கர்மத்தில் காணாத இன்பம் பக்தியில் காணுமா? ஸ்தல யாத்திரையின் மர்மம் இதுதானா? அயர்வும், சலிப்பும் சிருஷ்டி வேதனையா அல்லது சீரழிவின் தொடக்கமா?....

இந்த மாதிரியான பல எண்ணங்கள் எழுந்து கொண்டே இருந்தன. பக்தி, ஸ்தலயாத்திரை என்ற விஷயம் நினைவுக்கு வந்தவுடன் கவனம் பிளாட்பாரத்துக்குத் திரும்பிவிட்டது. அங்கே ஏராளமான யாத்திரிகர்கள். அவர்களுடைய மூட்டைகளையும், முடிச்சுகளையும் பார்த்தபொழுது எனக்கு ஒரு பைத்தியக்கார விருத்தி தோன்றிற்று. தங்களிடமுள்ள எல்லாவித அழுக்குகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, வெளுப்பதற்காக என்று புண்ணிய ஸ்தலங்களைத் தேடிச் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அவ்வளவு அழுக்கு! எண்ணெய்ப் பிசுக்கு ! நாற்றம்!

யாத்திரிகர்களில் சில ஸ்திரீகள் ஒய்யாரமாகச் சுருட்டைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் பொட்டுக்கடலையும் பொரியுமாகக் கலந்து இடது கையால் வாயில் அறைந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் எல்லாருமே என்னைப்போலத்தான்! நான் ஒரு பித்தில் கிளம்பியிருக்கிறேன்; ஏறக்குறைய அதே மாதிரிப்