பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

சோலை சுந்தரபெருமாள்


பித்தில் தான் அவர்களும் கிளம்பியிருக்கிறார்கள். இந்தப் பித்தே தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு மனிதனையும் பிடித்துக்கொண்டு வாழ்வைப் பாழாக்குகிறது. இந்தப் பித்தைத் தெளிய வைக்கும் மருந்தின் விஷயத்திலாவது தெளிவு இருக்கக்கூடாதா? இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது எனக்குப் பின்புறத்தில் பேச்சுக்குரல் கேட்டது. ஆணும், பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. பேச்சைமட்டும் கவனித்தேன். ஜன விகிதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும், இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சின் விஷயத்திற்கும் பேசிய குரல்களுக்கும் சற்றும் பொருத்தமில்லை. இந்த வியப்பில் திரும்பி ஜன்னல் வழியாகப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டாம் வகுப்புச் பிரயாணிகள்! கணவனும், மனைவியும் என்று மனம் பதிவு செய்துவிட்டது. குழந்தைகள் கிடையாதென்றும் மனம் பதிவு செய்து விட்டது. எந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த மாதிரி பதிவு செய்தாய்? என்று கேட்டால் மனம் நிச்சயமாக விழிக்கும். பதிவுதான் ஆகிவிட்டதே, கம்மா இருக்கலாகாதா? சத்திரத்தில் சோறில்லை என்றால் இலை பொத்தல் என்ற பழமொழியை நினைத்துக்கொண்டது. அந்தப் பழமொழியைப் போட்டு நாய் எலியைக் குதறுவதுபோல் குதறத் தொடங்கிவிட்டது.

இந்த மாதிரியான பிளாட்பாரக் காட்சிகளை மனம் பதிவு செய்து கொண்டிருந்த போதிலும் சலிப்பு மட்டும் அடங்கவில்லை. பத்தடி தள்ளிப் பிளாட்பாரத்தில் ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக்கடை தென்பட்டது. என் கை தானாகச் சட்டைப் பைக்குள்... கனவைப்போல மற்றொரு யோசனை தோன்றிற்று. ‘சலிப்பையும் அயர்வையும் போக்கப் பிரயாணத்தைத் தொடங்கினோம். பிரயாணமோ தடைப்பட்டு விட்டது. ஏதேனும் நல்ல புஸ்தகமாகக் கிடைத்தால் பொழுதையும் ஒட்டிவிடலாம் என்று நினைத்தேன். ஒரு ருஷியக் கதைப் புத்தகத்தை இரண்டு ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு அதே பெட்டிமேல் வந்து உட்கார்ந்தேன். மொத்தம் மூன்றே கதைகள்; 205 பக்கம். ‘பாலைவனத்தில் பிரயாணம் செய்கிறவர்கள் தோல் பைகளில் தண்ணீரை எடுத்துச் செல்வார்களே; அந்த மாதிரி இந்த ஒரு புத்தகம் ரெயில் பிரயாணம் முடியுமட்டும் போதுமானது, என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன்.

சுமார் இரண்டு மணி நேரந்தான் கழிந்திருக்கும். புத்தகத்தின் கடைசி ஏடு வந்துவிட்டது. ரஸமான புத்தகம். புத்தகம் முடிந்ததும் கூட்டுக்குத் திரும்பும் குருவிபோல் பழைய சூனியம் வந்தடைந்தது.