பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சோலை சந்தரபெருமாள்


குடித்தனங்களும், ஆலைகளும், தரித்திரமும் நிறைந்த நகரம் புஷ்பமா என்ன உனக்குத் தேன் அளிப்பதற்கு? நீ டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவேண்டும்” என்றான்.

எனக்கு ஒரு குலுக்குக் குலுக்கிற்று; இந்த அயர்வென்னும் வியாதியைக் கண்டுபிடித்து விட்டானே என்று.

பிறகு வீடுவந்து சேர்ந்தோம். சாப்பாடு முடிந்ததும் எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்காவிட்டால் மனத் திகிரியிலிருந்து என்ன என்ன விதக் கருத்துக்கள் உருவெடுத்திருக்குமோ?

இரண்டரை மணிக்கு எழுந்தேன். அப்போதுகூடப் பொழுதென்னும் வெளவால் எனக்குள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. “நல்ல சினிமாவாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டேன். ஒரு படத்தின் பெயரைச் சொல்லிவிட்டு, “முதல் ஆட்டத்துக்குப் போகலாம்” என்றான்.

“மூன்றுமணி ஆட்டம் இல்லையா?”

“உண்டு; என்ன அவசரம், வெயில் வேளையில் ?”

“சும்மாத்தான்.”

அதற்கு மேல் நண்பன் தர்க்கம் செய்யவில்லை. ஆட்டத்துக்குக் கிளம்பினோம். ஆட்டம் அரை மணிக்குமேல் ரஸிக்கவில்லை. எழுந்து போய்விடலாமா என்று கூடத் தோன்றிற்று. ஆனால் டிக்கெட்டுக்குப் பணம் நான் கொடுக்கவில்லை என்ற நினைப்பு அதற்கு ஒரு தடை செய்தது. சும்மா உட்கார்ந்திருந்தேன். பெரிய மாம்பழத்தை அணில் கொறிப்பதுபோல் மனத்தைப் பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. ஆட்டம் முடிந்து வீடு திரும்பினோம்.

இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு தனியாகக் கடற்கரைக்குச் சென்றேன். நிலவின் ஒளியில், அலையின் ஏற்றத்தாழ்வில் ஒரு சுடர் தெரிந்தது. வீடு திரும்பி வந்து படுத்துக்கொண்டேன். படுத்ததும் சிந்தனை ஒடிற்று.

"கஸ்தூரி மான் என்கிறார்களே, அது உண்மையா? கஸ்தூரி வாசனையைத் தேடிக் காடு முழுவதும் மான் அலைகிறது என்பதும் உண்மையா? அந்த மாய மானைப் போலத் தான் மனமா? தனக்குள் இருக்கும் நிலையான ஊற்றை அறியாது அதைத் தேடிப் பிரயாணத்தையும், ஸ்தல யாத்திரையையும், புஸ்தகப் படிப்பையும், சினிமா பார்ப்பதையும் மேற்கொள்வது சரியா?”

இதே சந்தேகத்துடன் மறுநாள் காலையில் எழுந்தேன். ரஜாவை ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்பவேண்டும் என்ற ஒரே எண்ணம் மேவி நின்றது. நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினேன்.