பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சோலை சுந்தரபெருமாள்


புறப்படுவதற்குமுன் நல்ல வேளை பார்த்துப் பரஸ்தானம் இருந்தோம். சாஸ்திரிகள், “ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும்; அவ்வளவு தான்!” என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக்கூட விடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்துவைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைபாக்கு, சேமதண்டு எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக் கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.

குஞ்சம்மாள் இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; “சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணு” என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.

அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவன் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு முதல் தடவையாக அன்று எங்கோ அடங்கிவிட்டது.

அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்வியமான சகுனம்; காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.

“ஒண்ணும். இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே” என்றெல்லாம் அம்மா அடிக்கடி தன்னையும், பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

ரயில் ஏறுகிறபொழுது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை யென்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும் கலக்கமுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.

“நீ புறப்படுகிறபோது ஒன்றுமே இல்லையே, அக்கா?” என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டுமென்று.

"ஒண்ணும் இல்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?” என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.

“அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!”

எது எப்படியானாலும், மனத்தைச் சில மணி நேரமாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத் துக் கொள்ளலாமென்று நினைத்ததுபோலப் பேச்சு வெளிவந்தது.