பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சோலை சுந்தரபெருமாள்


ரயில்வண்டி வெறிபிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம் போலத் தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது. சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப்போலப் பின்தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப்போல அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக்கொண்டே இருந்தது.

குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

எங்களவர்களுக்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்குத் தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.

அன்றென்னவோ, இன்னும் அதிகமாக அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் அன்று முதல்முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவன் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.

குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யார் கேலி செய்தாலும் அலட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக்கொள்ளுவாள்; ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக்கொண்டிருந்த பூவைப்போல, வேறு என்றும் எதுவும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப்பட்டது. வெற்றிலைக் காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்தது போலிருந்தது.

சோர்வில்தான் செளந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு...? இல்லை! இல்லை!

குஞ்சம்மாள் அன்றென்னவோ அப்படியிருந்தாள்.

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, “அம்பி, ஓங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?” என்றாள் குஞ்சம்மாள்.

அவளுடைய கண்களில் ஜலம் மள மள வென்று பெருகிற்று.

“என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை; நான் அழாத நாள் உண்டா? என் வாழ்வே அழுகையாக...” என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தாள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.