பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

81


“எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டதுண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தாற் போதுமென்று தோன்றிவிட்டது போனதடவை உடம்புக்கு வந்தபோது...”

இருவரும் வெகுநேரம் மெளனமாக இருந்தோம். ஆனால் மனசுமட்டும் மெளனமாக இருக்கவில்லை.

நல்ல நிசிவேளை, வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள். மெளனமாகப் பிசாசுகள் போல, அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், “இதென்ன ஸ்டேஷன்?” என்று தலையை வெளியே நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி விழுந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.

சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையில் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும், கூக்குரலும் அதிகமாயின; அதுவரையில் காலியாகவே வந்த எங்கள் பலகைகளில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண்குழந்தையும் பெட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவள் அணிந்திருந்த முதல்தரமான வைரங்களுடன் அவள்முகமும் ஜொலித்துக்கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப் பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.

வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம், என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி, “எங்கிட்டுப் போறிய அம்மா?” என்று கேட்டாள்.

என் தமக்கை சுருக்கமாக, “பட்டணம்” என்றாள். “நானும் அங்கேதாம்மா வாரேன்!” என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள். என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, “கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!” என்று சொன்னது போல எண்ணினாள்.

அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக்கொண்டு வந்தவள், உடனே இளகி அவளிடம் சங்கதி