பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மௌனி

புதுமைப்பித்தனால் ‘சிறுகதைத் திருமூலர்’ என்று போற்றப்பட்ட மெளனி, “எனது ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும் போது அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தையும் அவரது மூதாதையரும் சமீபகாலம் வரை இந்த ஊரில் வீடு, சொத்து சுதந்தரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள்..." என்று தான் பிறந்த ஊரைப்பற்றி செம்மங்குடி- ஊர் தேடல் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைத் தந்தது அந்தக் கட்டுரை. நான் பிறந்த காவனூருக்கும், செம்மங்கு டிக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் தான் இருக்கும். மொத்தத்தில் இருபத்திநான்கு சிறுகதைகளை மட்டும் எழுதி தமிழ் சிறுகதை இலக்கிய உலகில் ஒரு தனிபீடம் அமையப் பெற்றவர் மெளனி. ‘தமிழர்கள் பாக்கிய சாலிகள். ஆனால் தங்கள் பாக்கியத்தைத் தெரிந்து கொள்ளத்தான் அவர்களுக்குத் தன்மையோ அறிவோ போதுவதில்லை. ஆகவே 1935 இல் மெளனி எழுதிய சிறுகதைகள் 1959 இல் வெளிவருகின்றன..... மெளனியைப் பற்றித் தமிழ் வாசகர்களை இடித்துக் கூறுகிற காரியத்தைப் புதுமைப்பித்தன் தொடங்கினார். அதற்குப் பிறகு நான் சமயம் வாய்க்கும் போதெல்லாம் மெளனியின் பெயரைக் கூறி வந்திருக்கிறேன். இந்த மெளனியின் சிறுகதைகளில் ‘அழியாச்சுடர்’ ‘பிரபஞ்சகானம்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். மீதிக்கதைகள் எல்லாமே சிறுகதைக்கே உரிய அமைதியுடன் பிரமாதமாக அமைந்திருக்கின்றன. ஒதுங்கி நின்று, உள்ளதெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில், நோக்கும் பூராவும், கடினமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகின்ற காரியத்தை மெளனி சாதித்திருக்கிறார்..” இந்த அளவுக்கு இந்தச் சாதனையில் வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ்ச் சிறுகதையுலகில் வேறு யாரையும் சொல்லமுடியாது. அவரது நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் மெளனி என்று சொல்லலாம்...” என்று மெளனியின் சிறுகதை நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் கா.நா.சு.