பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குடும்பத்தேர்

பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு, ஒரு நாள், கிருஷ்ணய்யர் தன் வீட்டு ரேழி உள்ளே உட்கார்ந்துகொண்டு, நான்கைந்து தினம், எழுதப்படாது நின்றுபோன தினசரிக் கணக்கை எழுதிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணய்யருக்கு ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று வயது இருக்கலாம். திடசாரி, அவர் அந்தஸ்தும் கெளரவமும் உடையவர். குடும்ப பரிபாலனம், வெளி விஷய வியாபகம் முதலிய எல்லா விஷயங்களிலும் அக்கிராமத்தாருக்கு, பின்பற்றக்கூடிய லட்சிய புருஷராகக் கருதப்பட்டவர். நாலைந்து தினம் அசெளக்கியமுற்றுக் கிடந்து, அவருடைய தாயார் இறந்து போய் ஒரு மாதம் ஆகிறது.

கிழவிக்கு, அந்த எண்பது வருட உலக வாழ்க்கை, ஒரு மலர்ப்பாய்ப் படுக்கையாக இருக்கவில்லை. ஒரு தனவந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டது, அவளை சிற் சில சங்கடங்களுக்கு ஆளாகாது மீட்டதெனினும், அற்ப ஆயுளில் போன அவள் குழந்தைகள், குடும்பம் நடுநடுவே சஞ்சலங்கள் முதலிய இன்னும் எத்தனையோ விதப் பொறுப்புகளின் தன்மையற்ற தொல்லைகளை அவள் அனுபவிக்காமல் இல்லை. அதில் சந்தோஷமே தவிர அவள் வருத்தம் கொள்ளவில்லை. விவேகமான இயற்கை அறிவு கொண்டு அவள் நடத்திய குடும்ப வாழ்க்கை, வீடு நிறைந்த ஒரு சுடரொளி போன்றது.

செலவுகளை ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி எழுதலானார். ஆட்களுக்குக் கொடுத்தது. பறையன்கள் தண்ணிக்காக... தச்சன் கூலி... மூன்று நாள் முன்பு அமாவாசை தர்ப்பண தட்சினை. ஸ்வாமி புறப்பாட்டிற்கான ஊர் வீதாச்சாரம் எல்லாம் எழுதியாகிவிட்டது. அப்படியும் மூன்றே காலணாக் குறைந்தது. செலவு தெரியவில்லை. வழக்கமாக, எழுதிப் பழக்கப்பட்ட கை, ‘அம்மா பற்று... 0.3.3’ என்று எழுதிக் கணக்கைச் சரிக்கட்டிவிட்டது. அதைக் கிருஷ்ணய்யர் பார்த்தார். அதன் அர்த்தம் சிறிது சென்று திடீரென்று புலப்பட்டது போன்று அவர் கண்கள் நிரம்பின. இரு சொட்டுக் கண்ணீர் கணக்குப் புத்தகத்தின் மீது விழுந்தது. அறியாமல் விரலால் துடைத்த