பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சோலை சுந்தரபெருமாள்


போது ‘அம்மா பற்று......0.3.3’ என்ற வரி நன்கு காயாததினால் மெழுகிக் கறைபட்டது.

அது அவர் வழக்கம். சிறிது தொகை கணக்கிற்கு அகப்படாவிட்டால், தலையைச் சொறிந்தும்... பேனா மறுமுனையை மூக்கு நுனியில் அழுத்தியும்... என்ன ஞாபகப்படுத்தியும், செலவு தெரியாவிட்டால் ‘அம்மா பற்று’ என்று குறைந்த தொகையை எழுதி முடித்துவிடுவது அவர் வழக்கம்.

கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, இரண்டுதரம், நன்றாகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று கதவை தள்ளிப் பார்த்துவிட்டுக் கூடத்து ஊஞ்சலில் வந்து உட்காருவார். திருப்பத்தாழ்வாரச் சந்தனக் கல்லடியில், குருட்டு யோசனைகள் செய்துகொண்டு அவர் தாயார் படுத்திருப்பாள். மனைவி உள்ளிருந்து காப்பி கொணர்ந்து வைத்துவிட்டுப் போனவுடன், காப்பியை அருந்தி, வெற்றிலை போட்டுக்கொண்டே ‘அம்மா இன்னிக்கு உன் பற்று அணா’ என்று சொல்லுவார். உள்ளே இருந்து அவர் மனைவியின் சிரிப்புச் சப்தம் கேட்கும். அவர் தாயாருக்கோவெனின், சமீப சில வருஷமாக காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது. ஆனாலும் இவர் சொல்வது அவளுக்குக் கேட்கும். ‘ஆமாம் எனக்குத்தான் காக்கை புத்தி!' வைத்தது மறந்து விடும் ! உனக்கு ? அவ்வப்போது செலவு குறித்துக்கொண்டால் தானே. நான் இருக்கேன் என் தலையை உருட்ட, என் தலையிலேபோட, அப்புறம் வயது ஆகியும் குடும்பப் பொறுப்பு... அவள் சொல்லி முடிப்பாள். கிருஷ்ணய்யருக்கு சாந்த சுபாவம் தான். இருந்தாலும் தன் தாயார் சொல்லும்போது சிற்சில சமயம் கடிந்து பேசிவிடுவார் ‘ஆமாம், பிரமாதம்! குடிமூழ்கிப் போய்விட்டது. அடித்துக் கொள்ளுகிறாயே' என்பார்.

‘எல்லாம் இருந்தாத்தாண்டா. எப்படியாவது போயேன்; என் காதிலே போட்டால் தானே நான் சொல்லும்படியாகிறது.’ என்று சொல்லும்போதே அவளுக்கு வருத்தத்தில் அழுகை வந்துவிடும். சிறிது சென்றபின் பழையபடி தாயாரும், பிள்ளையும் பேசிக் கொள்வதைப் பார்க்கும்போது - இவருடைய குதுகல குடும்பப் பேச்சுகள்!

ஆம், அம்மா பற்று மூன்றே காலணாத்தான். எதிரிலே, மேஜையின் மீது நோட்டு விரிக்கப்பட்டு வெறிக்கப் பார்க்கிறது. அவர் கண்ணீர் நின்றுவிட்டாலும் மனது மட்டும் உள்ளே உருகிக் கொண்டிருந்தது. குடும்ப வீட்டின் தாய்ச் சுவர் இடிந்து கரைந்ததைக் கண்டார். அதற்குப் பிரதியாக, தன்னால் தாங்கி நிற்க முடியுமா என்ற எண்ணத்தில் தன் முழு பலவீனத்தையும் உணர்ந்தார். குடும்ப விவகாரங்களை, அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தன் தாயார் வகித்த ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ளச் சமயம் இன்னும் வரவில்லையே என்பதை எண்ணினார்.