பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சோலை சுந்தரபெருமாள்


உணர்ந்தார். பேசாது இருந்துவிட்டார். மறுநாள் விளக்கு வந்தபோது கிளாஸ் உடைந்து இருந்தது. தம்பூராவை நிமிர்த்தி சுருதி கூட்டியபோது அது விளக்கைத் தட்டியதினால் சிம்னி விரிந்து விட்டது. அந்த விஷயமும் தன் தாயாருக்குச் சொன்னார். அவருடைய மனதை அறிந்தவள் போன்றே ஆறுதலாக, “போகிறது. அல்பவிஷயம் ஸ்வாமி காரியம். ஒன்று வாங்கி வந்துவிடு சாயங்காலம்” என்றாள். அந்தச் சிம்னி தான் இதுவரையிலும் இருந்து வந்தது. எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்.

இரேழி உள் சாத்தாது வந்தது ஞாபகம் வந்தது. எழுந்து உள்ளே சென்று சிறிது உட்கார்ந்து இருந்தார். கணக்குப் புஸ்தகம் மூடி மேஜை அறையில் வைக்கப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார் கிருஷ்ணய்யர், மாட்டுக்காரப் பையன் மாடுகளை வீட்டு வாயில் வழியாக உள்ளே அடித்துவிட்டு ‘அம்மா மாட்டைக் கட்டுங்கோ’ என்று கூவிவிட்டுப் போய்விட்டான்.

மேல்காற்று வாயிலில் புழுதியைத் தூற்றிக் கொண்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த விரைக்கோட்டை அந்துகள் அவர் முகத்தில் மொய்த்தன. அவருக்கு அதுவும் தெரியவில்லை . ஜன்னல் கதவு காற்றில் தடாலென்று அடித்துக்கொண்டது. மேல்காற்று நாளில் தன் தாயார் சொல்வது ஞாபகம் வந்தது. “உடம்பு வலி எடுக்கும்; ரேழியிலேயே படுத்துக்கொள்,' அவர் எங்கே படுத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அவளுக்குத் தெரியாது. அவள் சொல்லிதான் விடுவாள். இரவிலே அநேகமாக அவள் தூங்கமாட்டாள். காது மந்தம்; கிழவயது. தாழ்வாரத்துக் கீற்று இரட்டை விரி இரவில் காற்று அடித்துக் கொள்ளும் போது ‘யார்-யார்?’ என்று கேட்டுவிட்டுப் பின்னர் விஷயத்தை யூகித்துக் கொண்டு பேசாது உறங்கிவிடுவாள், மற்றும் நடு இரலில் கேட்காத சப்தங்கள் (?) அவள் நுண்ணுணர்விற்கு எப்படியோ எட்டி 'யார்' என்று கேட்டும் திருப்தி அடையாது, இருளின் பயத்தை, அவள் ஊன்றுகோல் உதவின டக்டக் சப்தத்தினால் விரட்டுவது போன்று எழுந்து நடந்து ஒவ்வொரு இடத்தையும் தடவித் தடவித் திருப்தியுற்று, திரும்பிப் படுத்துக் கொண்டுவிடுவாள். மார்கழி மாதக் குளிரானாலும் அவளை வருத்தாது. விடியற்காலையில் எழுந்து ஏதோ சுலோகத்தை முணு முணுத்துக் கொண்டு, கொல்லை மேட்டிலிருந்து வாயில் வரையிலும் சாணம் தெளித்து வீட்டையே புனிதமாக்குவது போன்று வேலை செய்வாள்.

கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை. இழக்கப்பட்ட தாயார் தனக்குக் கவலைக்கு இடமின்றி குடும்பத்தை நடத்த எவ்வெவ்வகையில் உதவியாக இருந்தாள் என்பதை உணர்ந்தபோது, அவள் இடத்திற்கு யார் இப்போது இருக்கிறாள் என்பதை அவரால் கண்டுகொள்ள