பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

91


ஒரு குழந்தை போன்று, தன் தாயாரை இழத்தற்கன்று. மனது ஒரு நிதானமின்றி அலைமோதியது. அவருடைய குடும்பப் பொறுப்பைக் காப்பாற்றிப் பின்வருபவர்களிடம் ஒப்படைக்க, தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒரு உன்னத லஷ்யம். குடும்பம் என்பது சமூகத்தின் எவ்வளவு அடிப்படையான அஸ்திவாரம் என்பது அவருக்குத் தெரியும். எவ்வளவு நாகரிக முற்போக்கு எண்ணங்களிலும் கட்டுக்கடங்கி உணரமுடியாது எட்டிச் செல்வது போன்ற 'குடும்பம் குடும்பவாழ்க்கை' என்பது எவ்வளவு தூரம் தன் தாயாருடன் லயித்து இருந்தது என்பதை எண்ணித் துக்கமடைந்தார். உலகம் சீர்கெட்டுத் சிதைவுபடுவதின் காரணம் குடும்ப வாழ்க்கையில் சமாதானமற்று இருப்பது தான் என்பதை ஸ்பஷ்டமாக அறிந்தார். குடும்பத்தினர் ஒருவரிடமும், அதன் பொறுப்பு அடைபட்டுக் கிடக்கவில்லை. ஒருவர் ஏற்கும்படியான அவ்வளவு லேசானதல்ல. எல்லாரிடமும் அது இருப்பது முடியாது. அப்போது அது குடும்பப் பொறுப்பாகாது; சீர்கெட்ட தன் தலை ஆட்டம். பொறுப்பை வகிக்கும் அவர், பொறுப்பாளியின்றி, எல்லாம் தாயார் - தாயாரிடம் சொல்லி-சொல்லுக் கேட்டுத்தான்-அவர் குடும்பத் தலைவர்! ஒரு விசித்திர யந்திரம்தான் குடும்பம் என்பது!......

மாலை நேரம் சிறிது சிறிதாக இருட்டிவிட்டது. கிருஷ்ணய்யர் வாய்க்கால் சென்று சந்தி ஜபம் முடித்துக் கொண்டு விட்டிற்கு வந்தார். திண்ணைச் சாய்மனையில், எதிர்த் தூணில் காலை உதைத்துக்கொண்டு, சாய்ந்து படுத்திருந்தார். வாய் ஏதோ மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தாலும், மனது என்னவெல்லாமோ புரியாத வகையில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேலே மாடத்தில், ஒரு சிறு விளக்கு, லக்ஷ்மிகளை விசிப் பிரகாசித்தது. வெகு நேரம் அப்படியே சாய்ந்து கொண்டிருந்தார். உள்ளிருந்து வந்து தன் மனைவி விளக்கை எடுத்துச் சென்றதும் அவருக்குத் தெரியாது... அவர் கடைசிக் குழந்தை, 'அப்பா நாழிகையாச்சு - சாப்பிடவா -' என்று கூப்பிட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். வீதியில் சென்று அங்கிருந்தே பெருமாளைத் தெரிசித்துவிட்டு கதவைத் தாளிட்டு உள்ளே சென்றார். மனத்தில் ஒரு பெரிய பளுத்தொல்லை நீங்கினதான ஒரு உணர்ச்சி. பலங்கொண்டதான ஒரு எண்ணம். எதிர்கால வாழ்வு மிகவும் லேசாகத் தோன்றியது. ஒரு அளவற்ற ஆனந்தம். புரியாத வகையில் அவர் மனது 'குடும்பம் ஒரு விசித்திர யந்திரம். பழுது பட்டுப்போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை. அதற்குப் பிரதி மறு பாகம் தானாகவே உண்டாகிவிடும்...' என்று என்னவெல்லாமோ எண்ணியது.

-மணிக்கொடி 1936